Header Ads



கப்பலை விடுவிக்க உத்தரவிட்டாரா கோத்தாபய


இலங்கை கடலில் விபத்துக்குள்ளான நியூ டைமண்ட் கப்பலை விடுவிக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல் அவர் மீது சந்தேகிக்க நேரிடும் என்றும் எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சேர்ந்த சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கைக் கடலில் விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நஷ்ட ஈடு தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் எமது கடல்சார் சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்போது மதிப்பிடப்பட்டுள்ள நஷ்ட ஈட்டுத்தொகை போதுமானது அல்ல. இதனால் பாதிப்புக்களுக்கு ஏற்றவாறு முறையாக மதிப்பீடுகளை செய்து நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இதேவேளை, இதற்கு முன்னர் விபத்துக்கு உள்ளான நியூ டைமண்ட் கப்பல் தொடர்பில் இந்த பாராளுமன்றத்தில் பேசப்படுகின்றது. அந்த கப்பலை விடுவிப்பதற்காக அப்போதைய  வெளிவிவகார அமைச்சர் ஊடாக அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்ததாக அவர் மீது நீதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும்.


இது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையே. இந்த நம்பிக்கை தொடர்பான பிரச்சினை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ பதிலளிக்க  வேண்டும். இல்லாவிட்டால் இந்த கப்பலை அவரின் உத்தரவின் பேரிலேயே விடுவித்து உள்ளதாக கருத வேண்டிவரும் என்றார்.


No comments

Powered by Blogger.