Header Ads



"இது வெட்கக்கேடானது, இதற்குப் பெயர் கோழைத்தனம், ஹக்கீம் குறித்து கவலையடைகிறேன்"


முப்படையினரையும், விடுதலை புலிகளையும் சமநிலையில் வைத்துப் பார்க்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வெட்கக்கேடானது என்றும் அரசாங்கத்தின் இந்த செயலுக்கு வெட்கமடைகிறேன் என்றும் தெரிவித்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகர எம்.பி, நினைவு தூபி அமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற  பந்தயம், சூதாட்ட விதிப்பனவு திருத்தச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,


“யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் 'நினைவுத்  தூபி'ஒன்றை அமைக்க  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது. இதனை நல்லிணக்கம் என்று கூறக்  கூடாது. இதற்குப்பெயர் கோழைத்தனம்.


நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படையினரையும், பயங்கரவாதிகளான விடுதலை புலிகளையும்  எவ்வாறு சம நிலையில் பார்க்க  முடியும். நாட்டில் அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே முப்படையினர் போராடினார்கள். விடுதலை புலிகள்  நாட்டைப்பிரிக்க போராடினார்கள்.


திருகோணமலை மாவட்டத்தில்  சியாம் நிகாய மத வழிபாட்டுக்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமின்றி தடையேற்படுத்துவார்களாயின் பாரிய அழிவு ஏற்படும் என்று நான் தெரிவித்த  கருத்தின் நோக்கத்தை அறியாமல் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்த கருத்துக்களையிட்டு கவலையடைகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.