Header Ads



ஜனக்கவுக்கும், ரணிலுக்கும் ஏற்பட்ட பலாய் - புதன்கிழமை பதவி நீக்கப்படுவாரா..?


ஜனக்க ரத்நாயக்கவை  பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பிலான பிரேரணை பாராளுமன்றத்தில் நாளை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தனக்கு ஆதரவாக  நாளை  செயற்படுவார்கள் என நம்புவதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனக்க ரத்நாயக்க கூறினார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால்  2021 மார்ச் 14 ஆம் திகதி ஜனக்க ரத்நாயக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.


எனினும், 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உருவான மின்சார நெருக்கடிக்கான தீர்வுகளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைத்திருந்தாலும், அவை செயற்படுத்தப்படவில்லை.


காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராக இருந்தபோது, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அவ்வேளையில் ஜனாதிபதியை சந்தித்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைத்தார்.


எனினும், அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமல் இறுதியில் நாளாந்தம் 13 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.


இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுடன் ஏற்பட்ட விவாத நிலைமை தொடர்பிலான தகவல்கள் தற்போது வௌியாகியுள்ளன.


2018 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க அவ்வேளையில் பிரதமரின் செயலாளராக செயற்பட்ட சமன் ரத்நாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.


குறித்த கடிதத்தில், மின்சார நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என 2022 ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி அவ்வேளையில் பிரதமாக இருந்த ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறிய விடயம் திசைதிருப்பும் மற்றும் தவறான அறிக்கை என ஜனக்க ரத்நாயக்க பிரதமரின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.


அந்த கடிதத்தில் குறிப்பிடப்படுவதைப் போன்று, ஜனக்க ரத்நாயக்கவின் பிரத்தியேக உதவியாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  பிரதமரின் கூற்றுக்கு மாறான எவ்வித கருத்தையோ அல்லது அறிக்கையையோ  வௌியிட வேண்டாம் என தமக்கு அறிவிக்குமாறு பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.


அதன் பின்னர் பிரதமரின் செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முழுமையாக சுயாதீன நிறுவனம் என்பதனால் எவ்வகையிலும்  வாய்மூலமாக அச்சுறுத்தல் அல்லது ஆலோசனைகளை மூன்றாம் தரப்பிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டாம் என ஜனக்க ரத்நாயக்க அறிவித்துள்ளார்.


இந்த விவாத நிலைமை படிப்படியாக வலுப்பெற்று இறுதியில் கடந்த வருடம் ஆகஸ்ட் , ஜனவரி மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த எதிர்ப்பை அடுத்து நெருக்கடி மேலும் வலுப்பெற்றது.


கட்டணம் மதிப்பிடப்படும் விஞ்ஞானபூர்வ முறைக்கு ஏற்ப அரசாங்கம் முன்வைக்கும் முன்மொழிவு வீதத்தை விட குறைந்த வீதத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமான முறையில் கட்டணத்தை அதிகரிக்க முடியும் என ஜனக்க ரத்நாயக்க அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கூறினார்.


அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை கடுமையாக விமர்சித்ததுடன், அதன் இறுதி பெறுபேறாகவே அவரை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.


எனினும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழே உள்ளது.


பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிரான பிரேரணைக்கு ஆளுங்கட்சியில் பெரும்பான்மையாகவுள்ள பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என முன்னாள் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.


பிரேரணைக்கு எதிராக தாம் வாக்களிக்கப்போவதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே அறிவித்துள்ளது. 


ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளுடன் பொது எதிரணியாக செயற்படும் சுதந்திர மக்கள் கூட்டணியும் அதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. 


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி மேலவை இலங்கை கூட்டமைப்பாக செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தரப்பினரும் இந்த பிரேரணைக்கு இணங்கப்போவதில்லை என இன்று அறிவித்தனர். 

No comments

Powered by Blogger.