Header Ads



கடத்தப்படும் குழந்தைகள் - அதிர்ச்சித் தகவல் வெளியாகியது


- BY: M.F.M.Fazeer -


சிறுவர் இல்லங்களில் இருக்கும் ஆதர்வற்ற சிறுவர்களை, தனது மகனை பயன்படுத்தி கடத்தி அவர்களை ஹெரோயினுக்கு அடிமையாக்கி, கை, கால்கள் மற்றும் தோல் பகுதியில் சூடு வைத்து யாசகம் எடுக்கும் பணியில் ஈடுபடுத்தும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


கொழும்பு - இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் பெண்ணொருவர் சிறுவன் ஒருவனுடன் யாசகம் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பெண்ணையும், சிறுவனையும் மீட்டுள்ள பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த திட்டமிட்ட நடவடிக்கை வெளிப்பட்டுள்ளது.


பொலிஸார் குறித்த பெண்ணை விசாரித்த போது, அச்சிறுவனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


வெலிக்கடை பொலிஸாரின் தகவல்களுக்கு அமைய, மேலதிக விசாரணைகளில் பாரிய சிறுவர் கடத்தல் மற்றும் அவர்களை யாசகம் எடுக்க பயன்படுத்துதல் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.


அதன்படி, பொலிஸார் இந்நடவடிக்கை தொடர்பில் பேலியகொட, நுகே வீதியைச் சேர்ந்த எஸ். நிலூகா பிரியதர்ஷனி எனும் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.


அப்பெண்ணை கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவல முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தி இந்த விடயங்களை முன் வைத்த நிலையில், அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.


பொலிஸ் விசாரணைகளுக்கு அமைய சுமார் 20 சிறுவர்கள் வரை இதுவரை சிறுவர் இல்லத்திலிருந்து கடத்தப்பட்டு, பேலியகொடை பகுதியில் யாசகம் எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரையும் கைது செய்ய அவர்கள் தேடி வருகின்றனர்.


குறித்த பெண் யாசகம் எடுக்க ஈடுபடுத்திய 11 வயதான சிறுவன் ஒருவன் தற்போது பொரளை சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறுவதாகவும், ஹட்டன் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் அம்பேபுஸ்ஸ சிறுவர் இல்லத்திலிருந்து, சந்தேக நபரான பெண்ணின் மகன் ஊடாக பேலியகொடைக்குப் வந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.


அதன் பின்னர், குறித்த சிறுவனுக்கு வெள்ளை நிற தூள் வகையொன்று கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்த நிலையில், அவ்வாறு வழங்கப்பட்ட தூள் ஹெரோயின் போதைப் பொருள் என பொலிஸார் கண்டறிந்துள்ளானர்.


பொலிஸ் தகவல்கள் பிரகாரம், குறித்த சிறுவன் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட போது, பொலிஸ் நிலையத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருள் வழங்குமாறு கோரியதாக அறிய முடிகின்றது.


இந்நிலையில் தற்போது பொரளை சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் குறித்த சிறுவன் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளமையை வைத்தியர்களும் மேற்பார்வை செய்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.


குறித்த சிறுவனின் கைகள், கால்களில் சூட்டுக் காயங்களையும் பொலிஸார் அவதானித்துள்ள நிலையில் மறைவிடப் பகுதியிலும் சூட்டுக் காயங்கள் இருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.


இந்நிலையிலேயே இது தொடர்பில் விஷேட விசாரணைகளை நடாடத்தும் வெலிக்கடை பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 


இவற்றுக்கு மேலதிகமாக வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளிலும் சிறுவர்களை கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளதும், அதுதொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.