ஓமான் ஆடை நிறுவனம் : கட்டுநாயக்க முதலீட்டு வலயத்துக்கு இடமாற்றம், ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்
(எம்.எப்.அய்னா)
இதற்கான தீர்மானமெடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக விரைவில் அந்த தொழிற்சாலை அங்கு இடமாறும் என குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் யசீர் லாஹிர் தெரிவித்தார்.
இந் நிலையில், குறித்த இடம் மாற்றப்படும் நடவடிக்கைக்கு சுமார் 3 மாதங்கள் வரை செல்லலாம் என தெரிவித்த அவர், அதற்காக உற்பத்தி மற்றும் விநியோகத்தை சமனிலை செய்யும் பொருட்டு சில மூலப் பொருட்களை ஓமானில் உள்ள தமது நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளதாக கூறினார்.
இவ்வாறு மூலப் பொருட்களை அனுப்பும் போது, முதலீட்டை எடுத்துச் செல்வதாக நினைத்து ஊழியர்கள் ஆரப்பாட்டம் செய்த நிலையில், அவர்களுக்கு நிலைமை விளக்கப்படுத்தப்பட்ட பின்னர் அந் நடவடிக்கை தொடர்ந்ததாக அவர் கூறினார்.
நீர் கொழும்பு – படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்பே பகுதியில் ஓமான் முதலீட்டாளர் ஹல்பான் அல் உபைதி மீது இராஜாங்க அமைச்சர் ஒருவரின் அரசியல் அதிகார பின்னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியமை மற்றும், அவரது ஆடை தொழிற்சாலை மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் தொடர்பில் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவில், பொலிஸ் மா அதிபர் இது தொடர்பிலான விசாரணைகளை சி.ஐ.டி.யிடம் கையளித்துள்ள நிலையிலேயே இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த மார்ச் 30 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில், ஹல்பே பகுதியில் அமைந்துள்ள, குறித்த முதலீட்டாளருக்கு சொந்தமான ஆடை தொழிற்சாலைக்குள் அத்து மீறி கோடீஸ்வர வர்த்தகரான அந்த ஓமான் முதலீட்டாளர் மீதும், அவரது பாதுகாப்பு அதிகாரி மீதும் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த படல்கம பொலிஸாரும் நீர் கொழும்பு வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும் 4 சந்தேக நபர்களைக் கைது செய்திருந்தனர்.
சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன்னர், குறித்த அரசியல்வாதியின் சகா ஒருவர், ஆடை தொழிற்சாலைக்கு வாகனம் ஒன்றினை வாடகை அடிப்படையில் வழங்க முற்பட்ட போது, அதனை குறித்த முதலீட்டாளர் நிராகரித்தமை தாக்குதலுக்கான காரணம் என குறித்த ஆடை உற்பத்தி நிறுவனத்தின் பொது முகாமையாளர் யசீர் லாஹிர் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
இந் நிலையில் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் என அனைவரும் அளித்த உறுதி மொழிகளை அடுத்து, நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்துக்கு குறித்த ஆடை தொழிற்சாலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.- Vidivelli
Post a Comment