Header Ads



14 ஆம் திகதி ஜெயிக்கப் போவது யார்..? கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன..??


துருக்கியில் 2003ஆம் ஆண்டு எர்துவான் பதவிக்கு வந்த பின் அதிபருக்கான அதிகாரங்கள் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளன


துருக்கி அதிபர் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடிக்கும் நிலையில் தற்போது அரசியலில் அவர் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.


மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக 6 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெமால் கிலிக்சதரோ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


அதிபர் எர்துவான் ஆட்சியில் துருக்கி ஒரு சர்வாதிகார நாடாகவே மாறிப்போன நிலையில், அந்த நிலையை மாற்ற எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.


வேகமாக அதிகரிக்கும் பண வீக்கம், இரண்டு நிலநடுக்க பாதிப்புக்களில் 50,000 பேர் உயிரிழந்தது போன்ற பிரச்சினைகளின் தாக்கம் காரணமாக எர்துவான் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.


தேர்தலில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிபருக்கான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். இல்லை என்றால் இரண்டு வாரங்களில் மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும்.


தேர்தலில் எர்துவான் எதிர்கொள்ளும் சவால்

துருக்கி வாக்காளர்கள் அனைவரும் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சார்பானவர்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத வகையில் எதிர்க்கட்சி வேட்பாளர், அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கருத்துக் கணிப்புக்களில் தெரியவந்துள்ளது.


நவம்பர் 2002 முதல் அவரது நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அவர் 2003 முதல் பதவியில் இருந்து வருகிறார். முதல் முறையாக வாக்களிக்கவுள்ள சுமார் 50 லட்சம் பேருக்கு அதிபர் எர்துவானைத் தவிர வேறு தலைவர்களைத் தெரியாது.


தொடக்கத்தில் அவர் பிரதமர் பதவியில் தான் இருந்தார். ஆனால் அதன் பின் 2014-ல் அதிபர் பதவியேற்றார். இதற்கிடையே, 2016-ம் ஆண்டு புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் முயன்ற போது அதில் அதிபர் எர்துவானுக்கே வெற்றி கிடைத்தது. அதன் காரணமாக யாரும் எதிர்பாராத அளவுக்கு அவருடைய அதிகாரங்களை அதிகரித்துக் கொண்டார்.


தற்போது மிகப் பெரிய அதிபர் மாளிகையில் இருந்து கொண்டு எர்துவான் ஆட்சி புரிந்து வரும் நிலையில், பெரும்பாலான ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றன.


வட்டிவிகிதங்களை அதிகரிக்காமல் அவர் முரண்டு பிடித்து வருவதாலேயே பணவீக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டும் துருக்கியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி பணவீக்கம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் அது 100 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.


இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்ட போது நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என எர்துவான் மீது விமர்சனம் எழுந்தது.


கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி நடந்த இரட்டை நிலநடுக்கத்தின் போது, போதுமான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை எர்துவானின் அரசு மேற்கொள்ளவில்லை என்றும், கட்டுமானத் துறையில் ஏற்கெனவே அவர் சரியான விதிகளை அமல்படுத்தாததால் தான் பாதிப்புக்கள் அதிகமாக இருந்ததாகவும் அதிபருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 11 மாகாணங்களில் பல லட்சக்கணக்கான துருக்கியர்கள் வீடிழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் இப்பகுதியில் எர்துவான் ஆதரவு வாக்காளர்களே அதிகமாக வசித்து வருகின்றனர். அதனால் நாட்டின் கிழக்கு பகுதி வாக்காளர்கள் தான் அடுத்த அதிபரை முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதிபர் எர்துவானுடைய நீதி மற்றும் முன்னேற்றக் கட்சி அடிப்படையில் இஸ்லாம் மதக்கொள்கைகளைக் கொண்ட கட்சியாக இருந்தாலும், அவர் அதி தீவிர தேசியவாதி கட்சியான எம்.ஹெச்.பி.-யுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளார்.


74 வயதான கெமால் கிலிக்சதரோ அதிக நூல்களைப் படிக்கும் ஒரு சாதுவான நபராகவே இருந்து வருகிறார். சி.ஹெச்.பி. என அழைக்கப்படும் அவருடைய மக்கள் குடியரசு கட்சி இதற்கு முன்பு பல தோல்விகளை எதிர்கொண்டிருக்கிறது.


ஆனால் இந்த முறை 6 கட்சிகளின் ஒற்றை வேட்பாளராக அவர் களம் காண்கிறார். தேசியவாதிகள், இடதுசாரிகள், ஏற்கெனவே தற்போதைய அதிபருடன் கூட்டணி வகித்தவர்கள் மற்றும் அவருடைய கட்சியை உருவாக்கியவர்கள் ஒன்றாக இணைந்து அதிபருக்கு எதிரான வேட்பாளரை களம் இறக்கியுள்ளனர்.


குறிப்பாக, "இத்தேர்தல் துருக்கி நாட்டின் வரலாற்றிலேயே மிக முக்கிய தேர்தல்" என கருத்து தெரிவித்துள்ள குர்திஸ்தான் ஆதரவு கட்சியான ஹெச்.டி.பி.-யின் ஆதரவையும் கெமால் கிலிக்சதரோ பெற்றுள்ளார்.


குர்திஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக ஹெச்.டி.பி. மீது நீதிமன்றத்தில் புகார் நிலுவையில் உள்ளதால், இடதுசாரி பசுமை கட்சியின் பெயரில் களத்தில் குதித்துள்ள இக்கட்சி, அதிபர் வேட்பாளர் யாரையும் களத்தில் இறக்காமல், கெமால் கிலிக்சதரோவை ஆதரித்துள்ளது.


கடந்த 1994-ம் ஆண்டுக்குப் பின் முதன் முதலாக இஸ்தான்புல் மற்றும் அங்காரா மேயர்களாகத் தேர்வு பெற்ற, கெமால் கிலிக்சதரோவின் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் முக்கிய தலைவர்களாக பார்க்கப்பட்ட நிலையில், கெமால் கிலிக்சதரோவை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தொடக்கத்தில் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை.


அலெவி என்ற சிறுபான்மை இனத்திலிருந்து முக்கிய அரசுப் பதவிக்கு வந்த கெமால் கிலிக்சதரோ, அதிபர் எர்துவானின் பல ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு 24 நாட்கள் பேரணி நடத்தியது அதிபருக்கு எதிரான மிகப்பெரும் போராட்டமாக அறியப்பட்டது.


'டேபிள் ஆஃப் சிக்ஸ்' என அழைக்கப்படும் தற்போதைய கூட்டணி, அதிபர் எர்துவானின் பதவிக்காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்களை அளிக்கவே விரும்புகிறது.


இதற்காக, துருக்கி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 600 பேரில் 400 பேரின் ஆதரவைப் பெறவேண்டும் அல்லது ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்த 360 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.


இக்கூட்டணியில் உள்ள பிற கட்சிகளைச் சேர்ந்த 5 தலைவர்கள் துணை அதிபர் பதவியைப் பெற ஒப்புக்கொண்டுள்ளனர்.


பிரிக்கப்படும் வாக்குகள்

துருக்கி நாட்டின் கருத்து கணிப்புக்கள் எப்போதும் நம்பும்படியான கருத்துக்களைத் தெரிவித்ததில்லை. ஆனால், இடது சாரி கட்சியைச் சேர்ந்த முகரெம் இன்ஸ் அதிபர் வேட்பாளராக போட்டியில் குதித்துள்ள நிலையில், கெமால் கிலிக்சதரோவின் வெற்றிக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்பட்டது.


58 வயதான முகரெம் இன்ஸ், கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் கெமால் கிலிக்சதரோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அக்கட்சியிலிருந்து விலகினார்.


தற்போது மதசார்பற்ற தேசியவாத ஹோம்லாண்ட் கட்சியை நடத்திவரும் அவர், அதிபர் எர்துவானுக்கு ஆதரவாக வாக்குகளைப் பிரிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


ஆனால் அவர் சமூக வலைதளங்களில் அதிகமாக பதிவுகளை பகிர்ந்து வரும் நிலையில், இளம் வாக்காளர்கள் அவருக்கு அதிக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக டிக்டாக்கில் அவரது நடன அசைவுகள் பெரும்பாலானோரைக் கவர்ந்து வருகின்றன.


அதிபர் பதவி குறித்த கனவில் மிதக்கும் மற்றொரு வேட்பாளர் தீவிர தேசியவாத கட்சியைச் சேர்ந்த சைனான் ஓகன். இவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும் அடுத்த அதிபரை முடிவு செய்வதில் அவரது பங்கும் இருக்கும் என கருதப்படுகிறது.


அதிபர் எர்துவானை எதிர்த்துப் போட்டியிடும் கூட்டணியின் ஆதரவாளர் மெரால் அக்செனர்


600 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நுழைய ஒரு கட்சிக்கு குறைந்தது 7 சதவிகித வாக்குகள் கிடைக்கவேண்டும். அல்லது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அந்த வாக்குகளைப் பெறவேண்டும்.


அதனால் தான் துருக்கியில் கூட்டணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதில் 6 கட்சி கூட்டணி, சீர்திருத்தத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.


துருக்கியர்கள், கட்சிக்கு வாக்களிக்கிறார்களே ஒழிய, வேட்பாளர்களுக்கு அல்ல. அதனால் கூட்டணி கட்சிகள் இணைந்து பெற்ற வாக்குகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கின்றன.


எதிர்க்கட்சி வரிசையில் உள்ள நான்கு சிறிய கட்சிகள், சி.ஹெச்.பி. மற்றும் தேசிய அளவில் செயல்படும் மற்றொரு கட்சியுடன் இணைந்து அதிபர் எர்துவானுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆளும் மக்கள் குடியரசு கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தனித்தனியாக தற்போதைய அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றன.


குர்திஸ்தான் ஆதரவு கட்சியில் இருந்தும் இடதுசாரி பசுமை கட்சியின் பெயரில் போட்டியிடும் வேட்பாளர்களும் தொழிலாளர் நலன் மற்றும் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் செயல்படும் இந்த 6 கட்சி கூட்டணியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார்கள்.


எர்துவான் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் படி, தற்போது அரசை நிர்வகிக்கும் அதிகாரம் அதிபரிடம் தான் இருக்கிறது. அதனால் அங்கு பிரதமர் என்று யாரும் இல்லை. அப்படி இருக்கும் போது, நாடாளுமன்றத்தில் அதிபரின் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் தற்போதுள்ள நடைமுறையின் படி, அதிபர் பல்வேறு போராட்டங்களைக் கடந்து பயணிக்கவேண்டியிருக்கும். எர்துவானுக்கு ஆதரவான கட்சிகள் தற்போது 334 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்துள்ளன.


ஏற்கெனவே இரண்டு முறை அதிபராக பதவி வகித்துள்ள எர்துவான் மூன்றாம் முறையாகவும் அதிபராகப் பதவி வகிப்பது அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது.


ஆனால் அவர் 2014-ல் இருந்து பதவியில் நீடிப்பதை கருத்தில் கொள்ளமுடியாது என்றும், 2018-ம் ஆண்டு தேர்தல் சீர்திருத்தத்துக்குப் பின்னர் பதவியில் இருந்ததை மட்டுமே கருத்தில் கொள்ளமுடியும் என்றும் துருக்கியின் தேர்தல் வாரியம் அறிவித்துவிட்டது.


எர்துவான் மீண்டும் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதை அனுமதிக்கக் கூடாது என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஏற்கெனவே அந்நாட்டு தேர்தல் வாரியத்தை வலியுறுத்தியிருந்தனர்.


எதிர்க்கட்சிகள் எப்படி துருக்கி நாட்டின் தற்போதைய நிலையை மாற்றி அமைக்கும்?

துருக்கி நாட்டின் நாடாளுமன்ற முறை மற்றும் அதிபரின் அதிகாரங்களை மாற்றியமைக்க கெமால் கிலிக்சதரோவின் தேசிய கூட்டணி விரும்புகிறது. நாட்டின் அதிபருக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை நீக்கவும், அரசியல் கட்சிகளுடனான அதிபரின் உறவுகளைக் குறைக்கவும், அதிபர் தேர்தலை 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தவும் இந்த 6 கட்சி கூட்டணி முடிவெடுத்துள்ளது.


இதே போல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய துருக்கி கடந்த பல தசாப்தங்களாக மேற்கொண்டு வரும் முயற்சிகளை மீண்டும் முழுவேகத்தில் தொடங்கவும், அமெரிக்காவுடன் பரஸ்பர நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இந்த 6 கட்சி கூட்டணி விரும்புகிறது. எர்துவான் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடனான உறவுகள் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டன.


இரண்டு ஆண்டுகளுக்குள் பண வீக்கத்தை பத்து சதவிகிதத்துக்கும் குறைவான அளவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள 6 கட்சி கூட்டணி, சிரியாவிலிருந்து அகதிகளாக வந்து துருக்கியில் வசிப்பவர்கள் தாங்களாகவே தாய்நாடு திரும்பும் நிலையை உருவாக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளது. துருக்கியில் தற்போது சுமார் 36 லட்சம் சிரிய அகதிகள் வசித்து வருகின்றனர். BBC

No comments

Powered by Blogger.