Header Ads



அமெரிக்க சிறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் அட்லான்டா நகர சிறைச்சாலையில் உயிரிழந்த ஒரு நபரை “பூச்சிகளும் மூட்டைப்பூச்சிகளும் உயிரோடு சாப்பிட்டுவிட்டதாக” அவரது குடும்ப வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.


லாஷான் தாம்சன் ஒரு சிறு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதிகாரிகள் தீர்ப்பளித்த பிறகு ஃபுல்டன் மாவட்ட சிறையின் மனநல பிரிவில் வைக்கப்பட்டார்.


அவரது குடும்ப வழக்கறிஞரான மைக்கேல் டி ஹார்பர், தாம்சனின் உடல் முழுக்க பூச்சிகள் ஏற்படுத்திய துளைகள் நிறைந்திருந்ததைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டார்.


அவர் குற்றவியல் விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளதோடு, வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.


“தாம்சன் ஒரு மோசமான சிறை அறையில் பூச்சிகள் மற்றும் மூட்டைப் பூச்சிகளால் உயிருடன் சாப்பிடப்பட்டதால் இறந்து கிடந்தார். தாம்சன் வைக்கப்பட்டிருந்த சிறை ஒரு நோயுற்ற விலங்குக்குக்கூட ஏற்றதல்ல. இப்படியொரு நிலையில் அவரை வைத்திருக்கக்கூடாது,” என்று வழக்கறிஞர் ஹார்பர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.


ஃபுல்டன் கவுன்டியின் மருத்துவ கண்காணிப்பாளருடைய அறிக்கையின்படி, தாம்சன் செப்டம்பர் 19ஆம் தேதியன்று (அவர் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு) சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் பேச்சு மூச்சின்றி கிடந்தார். உள்ளூர் காவல்துறை, மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் அவரை உயிர்ப்பிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாக யுஎஸ்ஏ டுடே தெரிவித்துள்ளது.


தாம்சனின் நிலைமை மோசமடைந்து வந்ததை தடுப்புக்காவல் அதிகாரிகளும் மருத்துவப் பணியாளர்களும் கவனித்ததாகவும், இருந்தும் அவருக்கு உதவிகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறைப் பதிவுகள் காட்டுகின்றன என்று வழக்கறிஞர் ஹார்பர் கூறுவதாக பிபிசியின் அமெரிக்க ஊடகப் பங்குதாரர் சிபிஎஸ் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.


மருத்துவ பரிசோதகரின் அறிக்கை மனநல வார்டில் உள்ள அவரது அறையில் “கடுமையான மூட்டைப்பூச்சிப் பரவல்” இருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் தாம்சனின் உடலில் அதிர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் எதுவுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அவரது இறப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.


வழக்கறிஞரால் வெளியிடப்பட்ட புகைக்கப்படங்கள் தாம்சனின் நோயுற்ற தோற்றத்தைக் காட்டுகின்றன. அவரது முகமும் உடற்பகுதியும் பூச்சிகளால் சூழ்ந்திருப்பதைக் காட்டுகின்றன.


அந்தப் படங்களில் காணப்படுவதைப் போல் சிறை அறையின் நிலைமை இருப்பது மிகவும் “பயங்கரமானது” என்று மூட்டைப்பூச்சிகளில் நிபுணத்துவம் பெற்ற கென்டக்கி பல்கலைக்கழகத்தின் பூச்சியிஅல் வல்லுநர் மைக்கேல் பாட்டர் கூறினார்.


“நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூட்டைப்பூச்சிகளை ஆராய்ந்து வருகிறேன். நான் பார்ப்பது உண்மையாக இருப்பின், இந்த அளவுக்குக் கொடூரமான ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை எனக் கூறலாம்,” என்கிறார் மைக்கேல் பாட்டர்.


“மூட்டைப் பூச்சி கடித்தால் பொதுவாக மரணம் ஏற்படாது. ஆனால், சில அரிதான சந்தர்ப்பங்களில் பெரியளவில் மூட்டைப் பூச்சிகள் பரவியிருக்கும் இடத்தில் நீண்டகாலம் இருப்பது கடுமையான ரத்த சோகையை ஏற்படுத்தும். இதற்கு சிகிச்சையளிக்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது,” என்றும் பாட்டர் கூறுகிறார்.


“மூட்டைப் பூச்சிகள் ரத்தத்தைக் குடிக்கின்றன. மிகப்பெரிய எண்ணிக்கையிலான மூட்டைப் பூச்சிகள் மிகப்பெரிய அளவில் ரத்தத்தை உறிஞ்சுகின்றன,” என்று மைக்கேல் பாட்டர் கூறினார்.


இதன் தீவிர நிகழ்வுகளின்போது, பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வாமையை அனுபவிக்கலாம் மற்றும் அதி ஒவ்வாமை அதிர்ச்சி நிலைக்கும் செல்லலாம், இது அபாயகரமானது என்றும் கூறுகிறார் பாட்டர்.


“இப்போதைய சிறை வசதியின் பாழடைந்த, வேகமாக அரிக்கும் நிலைமைகள், அனைத்து கைதிகள், ஊழியர்களுக்கும் சுத்தமான, ஆரோக்கியமான சூழலை வழங்குவதற்கான இலக்கை அடைவதைச் சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது ஒரு ரகசியமான விஷயம் இல்லை,” என்று ஃபுல்டன் மாவட்ட ஷெரிஃப் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


சிறையின் நிர்வாக அலுவலகம், தாம்சனின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து முழு விசாரணையை அறிவித்துள்ளது. கூடுதலாக, “ஃபுல்டன் மாவட்ட சிறைக்குள் உள்ள மூட்டைப்பூச்சி, பேன் மற்றும் பிற பூச்சித் தொல்லைகளுக்குத் தீர்வு காண” 500,000 டாலர்களை உடனடியாகச் செலவு செய்துள்ளதாக அந்த அறிக்கை கூறியது.


சிறைச்சாலை நிர்வாகம், “சுகாதார நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கான பாதுகாப்பு நெறிமுறிகளை” புதுப்பித்துள்ளது.


“நடந்து வரும் விசாரணையில், வழங்கப்பட்ட மருத்துவ பராமரிப்பு தொடர்பான விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், இந்த வழக்கில் ஏதேனும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் தேவையா என்பதும் தீர்மானிக்கப்படும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஷெரிஃப் அலுவலகம், “ஓர் உயரடுக்கு பராமரிப்பு, மனநல சேவைகள், பாதுகாப்பு மற்றும் தூய்மை ஆகியவற்றை வழங்குவதற்கு” புதிய, பெரிய சிறைச்சாலையைக் கட்டுவதற்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.


அதிக மக்கள்தொகை, குறைவான நிதி மற்றும் சுகாதாரமற்ற சிறையாக நீண்டகாலம் புகழ்பெற்றுள்ள தற்போதைய நிலைமையில் இருக்கும் சிறைக்குப் பதிலாக புதிய ஃபுல்டன் கவுன்டி சிறைச்சாலைக்கான சாத்தியக்கூறு திட்டங்களை மாவட்ட ஆணையர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


கடந்த ஆண்டு, மனித உரிமைகளுக்கான தெற்கு மையம், ஃபுல்டன் கவுன்டி சிறைச்சாலையில் பேன், மூட்டைப்பூச்சி போன்ற பூச்சிகளின் கட்டுப்பாடற்ற பரவல் அங்குள்ள மக்களை அபாயகரமான அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளது என்ற தலைப்பில் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது.


அதில், சிறைச்சாலையை பாதிக்கும் பல சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டி, “எதிர்கால பரவல்களைக் கட்டுப்படுத்தவும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்தவும்” பரிந்துரைகளை வழங்கியது. BBC

No comments

Powered by Blogger.