Header Ads



பள்ளிவாசல் தாக்கப்படலாம் என்பதும், மூத்த ராஜதந்தரியின் அறிவுரையும்


பள்ளிவாயல்களில் தாக்குதல் நடை பெறலாம், அதனால் அவதானத்துடன் இருந்து கொள்வது மிக அவசியம் என போலீசார் அறிவித்து இருந்தால் அதில் நாம் மிகுந்த கரிசனை கொள்ள வேண்டும். 


ஈஸ்டர் தாக்குதல் பற்றிய எல்லா விசாரணைகளின் போதும், முன் கூட்டியே தகவல் கிடைத்தும் போலீசார் குறித்த கிறிஸ்தவ ஆலயங்களை பாதுகாக்கவும் அவற்றின் நிருவாகிகளுக்கு உரிய நேரத்தில் அறிவிக்கவும் தவறி விட்டார்கள் என்பது தெளிவாக வெளிப்பட்டது. அதனால் இன்னும் அவர்கள் குற்றம் சாட்டப் பட்டவர்களாகவே விமர்சிக்கப் படுகிறார்கள். 


அவ்வாறான சம்பவங்கள் எந்த இன மக்களையோ அல்லது அவர்களின் மதத் தலங்களையோ இலக்கு வைத்து எதிர் காலத்தில் நடத்தப்படுமாக இருந்தால், அது பூரணமான நம்பிக்கை அற்ற சூழ்நிலையை பொலிஸார் மீது தோற்றுவிக்க வாய்ப்பு உள்ளது. பொலிசாரும் அத்தகைய சூழல் ஒன்று உருவாவதை தவிர்க்கும் சிந்தை உடனேயே இருப்பர். 


எனவே, அத்தகைய முன் எச்சரிக்கை பற்றி மிக அவதானமாக இருப்பதுடன் போதுமான அளவு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியானது.


இதை எந்த வகையிலும் அலட்சியம் செய்யக் கூடாது. 


முக்கியமாக, முன் எச்சிக்கை செய்யப் படாத பிர தேசங்களில் உள்ளவர்களும் இதை மிகவும் கவனத்தில் எடுத்து மிகுந்த அவதானிப்புடன் இருத்தல் அவசியமானது. இது எங்கள் பிரதேசத்துக்கு உரிய அறிவிப்பு அல்ல என்று உதாசீனம் செய்து விடக் கூடாது.


பயங்கரவாத மற்றும் இன வன்செயல் முறைகள் பற்றி ஆராய விளையும் போது மிகவும் சாத்தியப் பாடுடன் தோன்றுவது ஏதெனில், அத்தகைய செயல்களை புரிய திட்டம் இடுபவர்கள், கடைசி நேரத்தில் மாற்றீடாக வேறு இடங்களில் அவற்றை நடத்த முயற்சிப்பதாகும். 


ஏப்ரல் 21 என்பது நமது நோன்பு காலத்திலேயே வருகிறது. அது ஈஸ்டர் தாக்குதல் நடந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகும் தினமும் ஆகும்.


தவிர, இலங்கை அரசு பயங்கர வாத எதிர்ப்பு சட்ட மூலம் ஒன்றை பல தரப்பினர்களின் எதிர்ப்பு களுக்கு மத்தியில் முன் எடுத்துச்  செல்ல எண்ணியுள்ளமை, நீதி அமைச்சரின் கூற்றுக்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. 


பெரிய அளவிலான அங்கலாய்ப்பை  ஏற்படுத்தி உள்ள சட்ட மூலம் ஒன்றை நிறை வேற்றுவதை, அவ்வாறு நடைபெறக்கூடிய பயங்கரவாத செயல்கள் இலகுவாக சாத்தியப் படுத்திவிடலாம். உயர் நீதிமன்றம் அத்தகைய சட்ட மூலம் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளதா என்பதை, அந்த சட்ட மூலம் பாராளுமன்ற கட்டளை நிரலில் சேர்க்கப்பட்டு ஒரு வார காலத்துக்குள், அது தொடர்பில் மனு ஒன்றை பெறுகின்ற போது, தீர்மானிக்கும். 


ஒட்டு மொத்தமாக, மிக விழிப்புடனும் முற்பாதுகாப்பு ஆயத்தங்களுடன் இருக்க வேண்டியது இலங்கை மக்கள் அனைவரினதும் கடமை என்பதை மறந்து விடும் நேரம் அல்ல இது.


மற்றைய சமூகங்களுடன் உறவுகளை மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானது. 


சட்டம் ஒழுங்கு என்பவற்றுக்கு பொறுப்பான துறையினருடன் ஒத்துளைப்பதும், எம்மையும் எம்மவர்களையும் நாமே கண்காணித்து கொள்வதும் மிக முக்கிய பொறுப்பாகும்.


அந்த வல்ல பெரிய நாயன் எல்லோரையும் நல் வழிப் படுத்துவானாக, அனைத்து அழிவுகளில் இருந்தும் பாவங்களில் இருந்தும், சகல விதமான சூழ்ச்சிகளிலிருந்தும் மக்கள் அனைரையும் பாதுகாப்பானாக. அதே வேளை, அனைவரினதும் முயற்சிகள் கரிசனைகள் என்பன காலத்தின் தேவையுமாகும். 


- ஏ. எல். ஏ. அஸீஸ் -


No comments

Powered by Blogger.