Header Ads



மனசு வைத்தார் எர்துவான்


பின்லாந்து நேட்டோவின் 31 ஆவது அங்கத்துவ நாடாக இடம்பிடிக்கவுள்ளது. அந்த நாட்டின் விண்ணப்பத்திற்கு துருக்கி பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்குக் கிடைத்ததை அடுத்தே இது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த இராணுவ கூட்டணியில் பின்லாந்து இணைவதை துருக்கி கடந்த பல மாதங்களாக தாமதித்து வந்தது. பின்லாந்து பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டு பின்லாந்துடன் சம காலத்தில் நேட்டோவுடன் இணைய சுவீடனும் விண்ணப்பத்திருந்தது. எனினும் இதே குற்றச்சாட்டில் அதன் விண்ணப்பத்தை துருக்கி தடுத்தது.


நேட்டோவில் அங்கத்துவம் பெறுவதற்கு அதன் அனைத்து உறுப்பு நாடுகளினதும் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் வரும் ஜூலையில் லித்துவேனியாவில் நடைபெறவுள்ள நேட்டோவின் அடுத்த மாநாட்டில் பின்லாந்தின் அங்கத்துவம் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவுள்ளது.


பின்லாந்தின் அங்கத்துவத்துக்கு துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் மார்ச் மாத ஆரம்பத்தில் ஒப்புதல் அளித்தார். துருக்கி பாதுகாப்பு தொடர்பில் அந்த நாட்டின் உண்மையான மற்றும் உறுதியான நடவடிக்கை பற்றி அதன்போது அவர் பாராட்டினார்.


எனினும் சுவீடன் மீதான துருக்கியின் எதிர்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த நாடு குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஸ்டொக்ஹோம் வீதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிப்பதாகவும் துருக்கி குற்றம்சாட்டுகிறது.


உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்தே தனது இராணுவ நடுநிலைத் தன்மையை கைவிட இந்த இரு நோர்டின் நாடுகளும் முடிவெடுத்தன.

No comments

Powered by Blogger.