72 இஸ்லாமியர்கள் படுகொலை, 41 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிப்பு
கலவரத்தில் தனது 11 குடும்ப உறுப்பினர்களையும் பறிகொடுத்த மொஹம்மத் இஸ்மாயில் |
- BBC -
36 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம், மல்யானா கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 41 இந்துக்களையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது விசாரணை நீதிமன்றம். இந்த கலவரத்தில் சிக்கி உயிர் பிழைத்திருப்பவர்களையும், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களையும் இந்த தீர்ப்பு விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
1987ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி, உத்தர பிரதேச மீரட் மாவட்டத்தின், புறநகர் பகுதியில் அமைந்துள்ள மல்யானா கிராமத்தில் கலவரம் நடந்தது. ‘பிரவுன்சியல் ஆர்ம்ட் கான்ஸ்டபலரி’ ( Provincial Armed Constabulary - PAC) என்று அழைக்கப்படும் மாகாண ஆயுதப்படை காவலர்களாலும்,இந்து மக்களாலும் இந்த கலவரத்தில் 72 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
`இந்திய ஜனநாயகத்தில் படியப்பட்ட ஒரு கறை` என இந்த கலவரம் குறித்து மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த வெள்ளியன்று நடந்த இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அமர்வுகளும், தற்போது வெளியாகியிருக்கும் இந்த தீர்ப்பும்,`நீதித்துறையில் நடந்திருக்கும் ஒரு கேலிகூத்து` என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள உத்தர பிரதேச காவல்துறையினரின் முன்னாள் தலைமை இயக்குநர் விபூதி நாராயண் ராய், "இது இந்த மாநிலத்தின் மிகப்பெரும் தோல்வி" என கூறியுள்ளார்.
"காவல்துறை, அரசியல் தலையீடுகள், நீதித்துறை மற்றும் பாரபட்சமாக நடந்துகொண்ட சில பத்திரிக்கைகள் என அனைவரின் பங்கீடுகளுடன், பாதிக்கப்பட்டவர்கள் படுதோல்வியை அடைந்துள்ளனர்" என அவர் பிபிசியிடம் குறிப்பிடுகிறார்.
இந்த வழக்கு குறித்த விசாரணை மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது என 2021ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் விபூதி நாராயண் ராய் . இந்த கலவரம் குறித்த செய்திகளை மிகத் தீவிரமாக எழுதி வந்த மூத்த பத்திரிக்கையாளர் குர்பான் அலி மற்றும் இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவருடன் இணைந்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
“ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கில் ஏதோ தவறு நடைபெற்று வருகிறது. 30ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெறாமல் நிலுவையில் இருந்தது. எனவே இந்த வழக்கு குறித்த விசாரணையை முதலில் இருந்து புதிதாக தொடங்குவதற்கும், நேர்மையான முறையில் விசாரணையை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் நாங்கள் மனு தாக்கல் செய்தோம்” என விபூதி நாராயண் ராய் கூறுகிறார்.
இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் குர்பான் அலி கூறும்போது, “படுகொலைகள் நடைபெற்ற சம்பவ இடத்தை காவல்துறையினர் மீண்டும் பார்வையிட வேண்டும் என நாங்கள் கூறினோம். ஏனென்றால், மாநில ஆயுதப்படை காவலர்களால்தான் (PAC) முதன்முதலில் கலவரம் தொடங்கப்பட்டது என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் கிளர்ச்சிகளை உருவாக்குவதற்காகவே இந்த காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
அம்னெஸ்டி இண்டெர்னேஷனல் என்ற மனித உரிமை அமைப்பும், இந்த சம்பவத்தில் ஆயுதப்படையினரின் தலையீடு இருந்தது பற்றி தங்களுடைய ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
“உடற்கூராய்வுக்கு பின் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் 36 பேர்களின் உடல்களில் துப்பாக்கி குண்டு துளைத்திருந்தது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் இந்த கிராம மக்கள் யாரிடமும் துப்பாக்கிகள் இல்லை ” என்று கூறுகிறார் குர்பான் அலி.
மல்யானா கலவரத்தில் பிஏசி-யின் தலையீடு உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றி தெரிந்துகொள்வதற்காக, அம்மாநில ஆயுதப் படையினரை, பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. அப்போது பேசிய மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், இந்தச் சம்பவம் குறித்து பேசுவதற்கு தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். இதுதொடர்பாக தலைமை காவல்துறை மையத்திற்கு மின்னஞ்சலும் அனுப்பப்பட்டிருக்கிறது.
கலவரத்திற்கு பின்பு காவல்துறையினரால் பதியப்பட்ட வழக்கில், மொத்தம் 93 இந்துக்கள் மட்டுமே குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 23 பேர் வழக்கு குறித்த விசாராணை நடைபெற்று கொண்டிருந்தபோதே இறந்துவிட்டனர். அதேசமயம் இந்த கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 31பேர் தலைமறைவாகிவிட்டனர்.
”இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த ஒருவர், ‘காவல்துறையினரின் அழுத்தத்தின் பேரிலேயே குற்றவாளிகளின் பெயரை கூறியதாக’ தெரிவித்தார். அதேபோல் இந்த கலவரம் நடைபெறுவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்து போயிருந்த 4 பேர்களின் பெயர்களையும், மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் பெயரையும் இந்த வழக்கில் காவல்துறையினர் சேர்த்திருந்தனர். இதுவே இந்த வழக்கின் விசாரணை தொய்வடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று குறிப்பிடுகிறார் எதிர்தரப்பு வழக்கறிஞர் சோட்டி லால் பன்சால்.
“இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மிகப்பெரும் வலியை அனுபவித்துள்ளனர். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதேசமயம் என்னுடைய கட்சிகாரர்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான். சுமார் 36 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிக்கிகொண்டு அவர்கள் தவித்து வருகின்றனர்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அரசு வழக்கறிஞர் மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர் என இந்த வழக்கை நடத்தி வரும் இரண்டு வழக்கறிஞர்களுமே காவல்துறை மீது குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் அவர்கள் எந்தவொரு காவல்துறை அதிகாரியின் பெயரையும் குறிப்பிடவில்லை.
தொண்டைப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த இளைஞர், வாளால் கூறுபோடப்பட்ட ஒரு தந்தையின் உடல் மற்றும் நெருப்பில் தூக்கி எறியப்பட்ட 5 வயது குழந்தை என கலவரத்தில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வுகளை பற்றி விவரிக்கிறது நீதிமன்ற தீர்ப்பின் 26வது பக்கம்.
இருந்த போதும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது, பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தையும் பெரும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
கலவரத்தில் சிக்கி இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட தழும்புகளுடன் உயிர் பிழைத்திருக்கும் வகீல் அஹ்மத் சித்திக், “மல்யானா கிராமத்தில் இருள் இறங்கியுள்ளது” என்று கூறுகிறார்.
”இந்த கலவரத்தில் யாரெல்லாம் இறந்து போனார்கள், யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என எனக்கு தெரியும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கலவரம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே, இந்து - முஸ்லிம் மக்களிடையே விரோதத்தை உருவாக்குவதற்கு சில வேலைகள் நடைபெற்று வந்தன. ஆனால் அது இவ்வளவு பெரிய கலவரமாக உருவெடுக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. சம்பவதன்று பிஏசி அதிகாரிகள் மூன்று வாகனங்களில் மீரட் பகுதிக்குள் நுழைந்தனர்.
இஸ்லாமியர்கள் வசித்து வந்த அத்தனை இடங்களையும் சுற்றி வளைத்த அவர்கள், தப்பித்துச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் மூடினர். சிலர் இஸ்லாமியர்களின் வீடுகளுக்குள் புகுந்தனர். சிலர் வீட்டின் கூரைகளின் மீது ஏறினர். அனைத்து பக்கங்களிலிருந்தும் துப்பாக்கி குண்டுகள் வந்து கொண்டிருந்தன” என்று நடந்த காட்சிகள் குறித்து மிரட்சியுடன் கூறுகிறார் வகீல் அஹ்மத் சித்திக்.
மல்யானா கலவரத்தில் வகீல் அஹ்மத் சித்திக் ஒரு முக்கிய சாட்சியாக இருந்தார். விசாரணையின்போது பல சாட்சியங்களை அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் இந்த தீர்ப்பு அவருக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
"இந்த வழக்கில் குற்றத்தை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்தன. ஆனால் எங்கே தவறு நடந்தது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அன்று மல்யானா கிராமம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை இந்த உலகமே பார்த்தது. ஆனால் நீதிமன்றத்தின் கண்களுக்கு மட்டும் அது எப்படி தெரியாமல் போனது” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்த கலவரத்தில் மொஹம்மத் இஸ்மாயில் என்பவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 11 பேரையும் பறிகொடுத்தார். கலவரம் நடைபெற்ற நாளில் அவர் வேறொரு இடத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்ததால், இன்று அவரது குடும்பத்தில் மொஹம்மத் இஸ்மாயில் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார்.
கலவரம் தொடர்பாக அவருக்கு மறுநாளே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவரால் உடனடியாக மல்யானா கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை. அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், நான்கைந்து நாட்கள் கழித்தே அவரால் அவரது ஊருக்குச் செல்ல முடிந்திருக்கிறது.
”எங்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன, சுவர்கள் ரத்தத்தால் நனைந்திருந்தன. பிழைத்திருந்த சில இஸ்லாமிய நண்பர்கள் அருகில் இருந்த மதரஸா பள்ளியில் தஞ்சம் அடைந்திருந்தனர்” என்று அவர் கூறுகிறார்.
அந்த கோடைகாலத்தில் மல்யானா கிராமத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தனித்து நடத்தப்பட்டது அல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கலவரம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், ஏப்ரல் 14ஆம் தேதி மீரட்டில் இஸ்லாமியர்கள் சார்பாக ஒரு மத ஊர்வலம் நடத்தப்பட்டது. அந்த ஊர்வலத்தின்போது சில தகராறுகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றன. அதன்பின்னரே மல்யானா கிராமத்தில் மிகப்பெரும் கலவரம் வெடித்திருக்கிறது.
அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இந்த கலவரத்தில் 174பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. ஆனால் உண்மையில் 350க்கும் மேற்பட்ட மக்கள் இந்த கலவரத்தில் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
”முதலில் இந்த கலவரத்தில் இரண்டு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவே கூறப்பட்டது. ஆனால் பின்னாளில் பிஏசி மற்றும் காவல்துறையினரால் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையாக இந்த கலவரம் அறியப்பட்டது” என்கிறார் விபூதி நாராயண் ராய்.
கலவரத்திற்கு முந்தைய நாளான மே22ஆம் தேதி, இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதியிலிருந்து 6கிமீ தொலைவில் அமைந்திருந்த ஹாஷ்மிபுரா பகுதியில் பிஏசி காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
அப்போது 48 இஸ்லாமிய ஆண்களை இழுத்துச் சென்ற அவர்கள் 42பேரை சுட்டுக் கொன்றனர். அதில் மீதமிருந்த 6 பேர் நடந்த கொடுமைகளை வெளியெ சொல்வதற்காக உயிர் பிழைத்திருந்தனர்.
புகைப்பட பத்திரிக்கையாளரான பிரவீன் ஜெயின், சம்பவ இடத்திலிருந்து கிளம்புமாறு காவல்துறையினரால் மிரட்டப்பட்டிருக்கிறார். ஆனால் புதர்களுக்கிடையே மறைந்திருந்து, அங்கே இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் புகைப்படம் எடுத்திருந்தார்.
2018ஆம் ஆண்டு, ஹாஷ்மிபுரா படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்த 21 பிஏசி அதிகாரிகளை குற்றவாளிகளாக அறிவித்து, ஆயுள் தண்டனை வழங்கியது டெல்லி உயர்நீதிமன்றம்.
பிஏசி-யில் இருந்த பெரும்பாலான காவலர்கள் இந்துக்கள் என்றும், அவர்களுக்கு மற்ற காவல்துறையினருக்கு அளிக்கப்படுவது போல மதசார்பின்மை குறித்த பயிற்சிகள் அளிக்கப்படவில்லை என்றும் மூத்த பத்திரிக்கையாளர் ஷரத் பிரதான் கூறுகிறார்.
1987ஆம் ஆண்டு காஸியாபாத்தில் விபூதி நாராயண் ராய் காவல் கண்காணிப்பாளராக இருந்தார். அப்போது அவர் எடுத்த முயற்சியினால்தான் ஹாஷ்மிபுரா படுகொலை வழக்கில் முறையான தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும் பிரதான் குறிப்பிடுகிறார்.
ஹாஷ்மிரா வழக்கில் வழங்கப்பட்டது போலவே, மல்யானா கலவர வழக்கிலும் ஒருநாள் நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என நாம் நம்புவோம் என்று கூறுகிறார் குர்பான் அலி.
தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக கூறுகிறார் குர்பான் அலி. ஏனென்றால், “இது தாமதிக்கப்பட்ட நீதி மட்டுமல்ல; பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி” என்று அவர் குறிப்பிடுகிறார்.
Post a Comment