Header Adsஒரே இரவில் ஹீரோ, 5 பந்தில் 5 சிக்ஸ் - யார் இந்த ரிங்கு சிங்...?


ஆமதாபாத் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

நேற்றைய இந்த போட்டியே நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்த போட்டியாகும். ஏனெனில் எந்த அணியும் 205 ரன்கள் இலக்கை இவ்வளவு சீரியசாக சேஸ் செய்தது இல்லை. 


 கொல்கத்தா அணியின் உத்தரப்பிரதேச வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி கொல்கத்தாவை தோல்வியின் பிடியிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 


தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெறவைத்தார். ஒரே நாள் இரவில் ஹீரோவானார் ரிங்கு. 21 பந்துகளைச் சந்தித்த ரிங்கு சிங் 1 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 48 நாட் அவுட் என்று ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 


கடைசி ஓவரில் 31 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற முதல் அணியாக திகழ்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 


யார் இந்த ரிங்கு சிங்...! 


ரிங்கு சிங் அக்டோபர் 12, 1997-ல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். இப்போது இவருக்கு வயது 25. உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் கேஸ் சிலிண்டர் வியாபாரியின் 5 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் ரிங்கு சிங். 


சிறு வயதில் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்ததும் தந்தைக்கு உதவியாக கேஸ் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே கொண்டு போய் டெலிவரி செய்யும் வேலையை அவர் செய்து வந்துள்ளார். 


கிரிக்கெட் விளையாடச் செல்லும் போதெல்லாம் அவரை வீட்டில் தந்தை அடித்து உதைப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டிருந்தது. 


உத்தரபிரதேச அணிக்கு முதல்தரக் கிரிக்கெட்டை ஆடியவர் இவர். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 40 போட்டிகளில் 2875 ரன்களை 59.89 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 163. ஏழு சதங்கள் 19 அரைசதங்கள். லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் 50 ஆட்டங்களில் 1749 ரன்களை 53 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 1 சதம் மற்றும் 16 அரைசதங்கள் எடுத்துள்ளார். 


2018-ம் ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 80 லட்ச ரூபாய்க்கு இவரை வாங்கிய பிறகே வெளியுலகிற்கு ரிங்கு சிங்கின் பெயர் முதன் முறையாக தெரியவந்தது. 


அலிகாரைச் சேர்ந்த மசூத் அமின் என்பவர்தான் ரிங்குவை சிறு வயது முதலே வழிநடத்தி வந்துள்ளார். அவர்தான் இப்போதும் ரிங்கு சிங்கை வழிநடத்துகிறார். 


முகமது ஜீஷன் தனக்குச் செய்த உதவியை ரிங்கு இன்றும் மறக்காமல் இருக்கிறார். ரிங்கு சிங் தனது வாழ்க்கை அனுபவம் குறித்து கூறியதாவது:- 


"வேலையில்லாத நேரத்தில் மட்டுமே நான் கிரிக்கெட் விளையாடச் செல்ல வேண்டும் என்பது என் தந்தையின் விருப்பம். அதனால், நான் கிரிக்கெட் விளையாடச் செல்வது, அதற்காக வீட்டில் திட்டு வாங்கி, உதைபடுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. 


வீட்டிற்கு வந்ததும் என்னை அடித்து உதைக்க வேண்டும் என்றுதான் அவரும் எண்ணுவார். ஆனால் என் சகோதரர்கள் எனக்கு ஆதரவாக வருவார்கள். கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கைவிடாமல் அதனைத் தொடரச் செய்தது அவர்கள்தான். 


கிரிக்கெட் பந்து வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சில நல்ல உள்ளங்கள் எனக்கு உதவி செய்தார்கள். ஒரு கட்டத்தில், குடும்பத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது ஒரு கோச்சிங் சென்டரில் துப்புரவுப் பணியில் சேர்ந்தேன். 


"பயிற்சி நிறுவனம் ஒன்றில் தளத்தை சுத்தம் செய்யும் துப்புரவாளர் பணி கிடைத்தது. தினமும் அங்கு காலையில் சென்று தரையை சுத்தம் செய்ய வேண்டியது என் வேலை. 


என் சகோதரன் மூலமாக எனக்கு அந்த வேலை கிடைத்தது. அந்த வேலையில் தொடர எனக்கு விருப்பம் இல்லை என்பதால் வேலையை விட்டுவிட்டேன். அது சரியான முடிவு என்று நான் நினைக்கவில்லை. 


ஏனெனில், படிப்பில் நான் மிகவும் சுமார் ரகம். அதனால், கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தீர்மானித்தேன். ஏனெனில், என் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல கிரிக்கெட்டில் தேர்வதே முக்கியம் என்று நினைத்தேன் என கூறி உள்ளார்.


No comments

Powered by Blogger.