Header Ads



சுயமாக முன்னேறுபவர்கள் நாட்டுக்குத் தேவை - ரணில்


பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 நாட்டின் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான தேவை ஏற்பட்டுள்ள இக்காலத்தில், ஒன்றிணைக்கப்படும் டிராக்டர்கள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை இன்று முதல் கொள்வனவு செய்வதற்கு வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தினால் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.


திறந்து வைக்கும் நிகழ்வுக்குப் பின்னர், தொழிற்சாலை வளாகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,


சைக்கிள், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை இணைக்கும் செயற்பாடு குறித்து  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


 இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,


 வோல்டா நிறுவனத்தின் திறமைகளை பார்வையிடக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனத்திற்கு அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஆதரவு தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பசுமை வலுசக்தி பொருளாதாரத்தை உருவாக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை நாம் பாராட்ட வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை, பசுமை வலுசக்தி பொருளாதாரத்திற்கு மாற்ற அனைவரும் பாடுபட வேண்டும். இப்போது உலக நாடுகள் பசுமை வலுசக்தி பொருளாதாரத்தை நோக்கி நகர்கின்றன. இலங்கை என்ற வகையில் நாமும் அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.


அடுத்த ஐந்தாண்டுகளில், பசுமை வலுசக்தி பொருளாதாரத்தை நோக்கி நகர்வதன் மூலம் பல நன்மைகளை அடைய இலங்கைக்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு, சுயமாக முன்னேறும் இத்தகைய முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் நாட்டுக்குத் தேவை. எனவே, ஜகத் மாகவிடவின் இந்த வர்த்தகத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.


 ஜனாதிபதி ஊடகப் பிரிவு

02.03.2023



No comments

Powered by Blogger.