Header Ads



ஆபத்தான அம்சங்களை உள்ளடக்கிய 'பயங்கரவாத எதிர்ப்பு' சட்டமூலத்தை எதிர்க்குமாறு எதிர்கட்சிகளிடம் கோரிக்கை


சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளை அமுல்படுத்தும்போது, அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை ஒடுக்கும் நோக்கில் நீதி அமைச்சர் முன்மொழிந்துள்ள "பயங்கரவாத எதிர்ப்பு" சட்டமூலத்தை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டாமென நாட்டின் தொழிற்சங்கத்தலைமை எதிர்க்கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளது.


கொழும்பில் வார இறுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மக்களின் பட்டினிப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கத் தவறிய அரசாங்கம் புதிய சட்டத்தின் மூலம் போராட்டங்களை ஒடுக்க தயாராகி வருவதாக வலியுறுத்தியுள்ளார்.


2023ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட மறுநாள் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஒரு மாதத்திற்கு முன்னர் வன்முறைத் தடுப்புச் சட்டமாக அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.


"2023.02.20 கொண்டு வரப்பட்ட சட்டம் வன்முறை தடுப்புச் சட்டம். வன்முறை என்ற பெயரில் வரும் போராட்டங்களை ஒடுக்குவதே இதன் நோக்கம்." தொழில்சார் போராட்டங்களை நசுக்குவது மாத்திரமன்றி மேலும் பல ஆபத்தான அம்சங்கள் இந்த சட்டமூலத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஆசிரியர் சங்கத் தலைவர், ஊடகங்களை ஒடுக்கவும் இது பயன்படும் என எச்சரித்துள்ளார்.


"தொழிற்சங்க நடவடிக்கை என வைத்துக் கொள்வோம். அந்தச் செயலை பயங்கரவாதமாகப் பதிவு செய்தால், மறுபுறம் அதனை பிரச்சாரம் செய்வது, ஊடகங்களில் அவற்றை வெளியிடுவது அனைத்துமே தண்டிக்கப்படும்.


நாட்டில் இதுவரையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் சந்தேகநபர் ஒருவரை மூன்று மாத காலத்திற்கு தடுப்புக் காவலில் வைக்க ஜனாதிபதி கையொப்பமிட வேண்டும் என சுட்டிக்காட்டிய, சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் ஆனால் புதிய சட்டத்தின் மூலம் அந்த அதிகாரம் ஒரு பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.