Header Ads



இலங்கைக்கான சவூதி தூதுவரின் விஷேட பேட்டி


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி வழங்கிய விஷேட பேட்டி


கேள்வி: சவூதி அரேபியாவின் 'விஷன் 2030' இல் பெண்களின் பங்கு பற்றி குறிப்பிட முடியுமா?


பதில்: எமது நாட்டின் ஸ்தாபகர் மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் சஊத்தின் காலம் முதல் இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சஊத்தின் காலம் வரையில் எமது நாட்டு பெண்கள், நாட்டின் முன்னேற்றத்தில் தீவிர பங்காளியாக மாறும் அளவுக்கு, வலுவூட்டல் மற்றும் கட்டியெழுப்புதல் செயற்பாடுகளின் பல வெளிப்பாடுகளை அனுபவித்து வந்துள்ளனர். அறிவியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகம் போன்ற பல்வேறு துறைகளில் பல்வேறு தரத்தை அடைந்து கொள்வதிலும் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.


விஷன் 2030 மூலோபாயத்திட்டம் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெண்களுக்கு தேவையான முயற்சிகளை உள்ளடக்கி, அனைத்து மட்டங்களிலும் செல்வாக்கு மிக்க காரணியாக அவர்களை முன்னிலைப்படுத்துகிறது. சவூதி அரேபியா கண்டுவரும் வளர்ச்சி இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வகையில், பெண்களின் செயல்திறனை உயர்த்துவதற்கும் தொழில் சந்தையில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் அது ஒரு தனியான மூலோபாய இலக்கை முன்வைத்துள்ளது.


கேள்வி: தொழிலாளர் சந்தையில் பெண்கள் வலுவூட்டல் முயற்சி குறித்து குறிப்பிடுவதாயின்?


பதில்: பெண்களை வலுவூட்டும் நோக்கில் எமது அரசால் பல முன்முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனிதவளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் ஊடாக பெண்கள் வலுவூட்டல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இம்முன்முயற்சியானது, உயர் பதவிகளுக்கமர்த்துவதன் மூலம், பொது மற்றும் தனியார் துறைகளிலும், அனைத்து வேலை மட்டங்களிலும் பெண்களின் தரமான பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வாறே அவர்களின் ஆற்றல்கள் மற்றும் திறன்களில் முதலீடு செய்தல், தத்தமது விருப்பங்களுக்கு ஏற்ப தொழில்களைத் தேர்வு செய்து கொள்ளக்கூடியவாறு தொழில் துறைகளை விரிவுபடுத்துதல், பாலின சமநிலையை அடைவதற்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான அளவு, தரம் அடிப்படையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் அவர்களின் பங்களிப்பை அதிகரித்தல், மனித, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் தடைகளை முறியடித்தல் போன்ற இன்னோரன்ன காரணிகளையும் நோக்காக கொண்டுள்ளது.


கேள்வி: பெண்களை வலுவூட்டல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எவை?


பதில்: எமது அரசாங்கம் தகுதிவாய்ந்த பெண்களை பல உயர்பதவிகளில் அமர்த்துவதற்கு ஆர்வமாக உள்ளது. அதனால், தலைமைத்துவம் மற்றும் நிர்வாகப் பதவிகளூடாக திறம்பட பங்களிப்பதில் பெண்களின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, அபிவிருத்தி முயற்சிகளைத் துரிதப்படுத்துவதில் பெண்களை அதிகம் இணைத்துக்கொள்ளும் நோக்கில் பல சட்டங்களும் சீர்திருத்தங்களும் கடந்த சில ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2013 இல் ஷூரா சபையில் 20% இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யும் அரச அங்கீகாரம் வழங்கப்பட்டது, மேலும் நகராட்சி நிர்வாகக் குழுவிற்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பல பெண்கள் அரசாங்கத்துறையில் தலைமைப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார்கள். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வலுவூட்டல் செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் பல சட்டக் கட்டமைப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.


சவூதி மனித உரிமைகள் ஆணையம் அதன் பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் பெண்களுக்கான பிரத்தியேகமான ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. அக்குழு அனைத்து துறைகளிலும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.


கேள்வி: சவூதி அரேபியாவில் பெண்கள் வலுவூட்டலின் மிக முக்கிய அம்சங்கள் குறித்து சுருக்கமாக குறிப்பிடுங்கள்?


பதில்: இஸ்லாமிய 'ஷரிஆ' விலிருந்து உருவான சவூதி அரேபியாவின் சட்டங்கள், நீதியை நிலை நாட்டும் நோக்கில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான முழு சமத்துவக் கொள்கையை ஏற்றுக்கொள்கின்றன. பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக, இரு பாலினருக்கும் ஓய்வூதிய வயதை ஒருங்கிணைத்தல், ஊதியம், வேலை வகை, புலம் மற்றும் வேலை நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் பாலின பாகுபாட்டைத் தடுப்பது, அத்துடன் முன் அனுமதி பெறாமல் பெண்கள் வணிகத்தில் ஈடுபடுவதை சாத்தியமாக்குவது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



கேள்வி: வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்காக நடைமுறையிலுள்ள சட்டங்கள் எவை?


பதில்: எமது நாட்டு சட்டங்கள், வன்முறையை அதன் அனைத்து வடிவங்களிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை, குற்றமாகப் பிரகடனம் செய்துள்ளன. செப்டம்பர் 2013இல் வெளியிடப்பட்ட 'துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பு தொடர்பான சட்டம் துஷ்பிரயோகத்தை, அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் தடைசெய்து குற்றமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தில் விஷேட பிரிவொன்று உருவாக்கப்பட்டு வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.


கேள்வி: உங்களது நாட்டில் அரசியல் மற்றும் பொது வாழ்வில் பெண்களின் வகிபாகம்?


பதில்: பெண்கள் பல அரச நிறுவனங்களில் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர், மேலும் ஷூரா கவுன்சில் அங்கத்தவர்களாக பெண்கள் குறைந்த பட்சம் 20% உள்ளனர், பெண்கள் ஷூரா கவுன்சிலில் பல விஷேட குழுக்களின் தலைமை மற்றும் உறுப்பினர் பதவிகளை வகிக்கின்றனர். ஷூரா சபையில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 97 பேராகும். மனித உரிமைகள் ஆணையத்தில் 12 பெண்கள் பணி புரிகின்றனர். இது ஆணையத்தின் மொத்தத் தொழிலாளர்கள் தொகையில் 50% ஆகும். பெண்கள் ஷூரா கவுன்சிலின் உரிமைகளுக்கான குழுவில் உறுப்பினர்களாக 70% விகிதம் உள்ளனர். அத்தோடு சட்டமா அதிபர் திணைக்களத்தில் 200 பெண் உறுப்பினர்களும், 282 பெண் நிர்வாகிகளும் 238 பயிற்சி பெறும் பெண்களும் பணியாற்றுகின்றனர்.


வெளிவிவகார அமைச்சில் 154 பெண்கள் இராஜதந்திரிகளாகவும் 33 பெண்கள் தலைமைப் பதவிகளை வகிப்பவர்களாகவும்


144 பெண்கள் நிர்வாக ஊழியர்களாகவும் கடமையாற்றுகின்றனர். பாதுகாப்பு மற்றும் இராணுவத் துறைகளில் 8377 பெண்களும் உள்துறை அமைச்சிலும் அதனோடு தொடர்பான நிறுவனங்களிலும் 9976 பெண்களும் பணியாற்றுகின்றனர்.


கேள்வி: - சவூதி அரேபியாவின் தொழில் சந்தையில் பெண்கள் வலுவூட்டல் குறிகாட்டி எவ்வாறுள்ளது?


பதில்: விஷன் 2030 க்கு இணங்க, சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த முயற்சிகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள், பெண்கள் வலுவூட்டல் இலக்குகளில் முன்னேற்றம் பிரதிபலிப்பதை அவதானிக்கலாம். 2021 இன் இரண்டாவது காலாண்டில் எமது பெண்களின் பங்கேற்பு 32.4% இலிருந்து 2022 இன் அதே காலாண்டில் 35.6% ஆக அதிகரித்துள்ளது. அவ்வாறே 2021இன் இரண்டாவது காலாண்டில் பெண்களின் வேலையின்மை 22.3% இலிருந்தது. 2022 இன் அதே காலப்பகுதியில் அது 19.3% ஆகக் குறைந்துள்ளது. உலக வங்கியால் வெளியிடப்பட்ட பெண்கள் மற்றும் சட்டப் பணி அறிக்கை, பல துறைகளில் பெண்கள் வலுவூட்டல் செயற்படுகளில் எமது நாடு அடைந்துள்ள பெரும் முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளது. பெண்கள் வலுவூட்டல் செயற்பாடுகளில் எமது நாட்டின் குறியீடு 2019 இல் 25.63 புள்ளிகளாக இருந்தது, அது 2022 இல் 80 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.


​கேள்வி - நிறைவாக, இலங்கையைச் சேர்ந்த பெண்கள் சவூதி அரேபியாவிலும் பணிப்பெண்களாகப் பணிபுரிகின்றனர். அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட முடியுமா?


பதில்: ஆம். நிச்சயமாக, இலங்கைப் பெண்கள் என்றாலும் பிற நாட்டு பெண்கள் என்றாலும் பெண்கள் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகளும் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு தேவையான அனைத்து சட்ட ஏற்பாடுகளும் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஊடாக இலங்கைப் பணிப்பெண்களும் பெண்கள் என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்கின்றனர். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 


பேட்டி கண்டவர்:

மர்லின் மரிக்கார்...

No comments

Powered by Blogger.