Header Ads



இறைவன் எனக்கு சகலதையும் கொடுத்திருக்கிறார், உரிமைக்காக தெருவில் இறங்க வேண்டும்


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கடந்த ஆண்டு ஏப்ரலில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து, ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்திவருகிறது. 


அதிலும் குறிப்பாக, இம்ரான் கான் பிரதமராகப் பதவி வகித்தபோது, வெளிநாட்டுத் தலைவர்கள் பரிசாக அளித்த பொருள்களை, அவர் சட்டவிரோதமாக விற்றதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் இம்ரான் கான்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.


ஆனால், அதை அவர் தவிர்த்துவிட்டதால், இம்ரான் கானைக் கைதுசெய்ய பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, கூடிய விரைவில் இம்ரான் கான் கைதுசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இம்ரான் கான், `என்னைக் கொன்றாலும்கூட, நான் இல்லாமல் உங்களால் போராட முடியும் என்பதை நிரூபியுங்கள்' என மக்களிடம் கூறியிருக்கிறார்.


மக்களிடம் வீடியோ மூலம் உரையாற்றிய இம்ரான் கான், ``என்னைக் கைதுசெய்ய போலீஸார் வந்திருக்கின்றனர். இம்ரான் கான் சிறைக்குச் சென்றுவிட்டால், மக்கள் தூங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதைத் தவறென்று உணர்த்தி, மக்கள் உயிர்ப்புடன்தான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். கடவுள், இம்ரான் கானுக்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறார்.


உங்களுடைய போரில் நானும் போராடுகிறேன். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் போராடினேன், தொடர்ந்து போராடிக்கொண்டேயிருப்பேன். ஆனால், எனக்கு ஏதாவது நேர்ந்தாலோ, அவர்கள் என்னைச் சிறையிலிட்டாலோ, கொன்றாலோகூட, இம்ரான் கான் இல்லாமலும் போராட முடியும் என்பதை நீங்கள் உணர்த்த வேண்டும். மேலும், ஒற்றை மனிதனின் ஆட்சியையும், அடிமைத்தனத்தையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கூறினார்.


கடந்த நவம்பரில் தேர்தல் நடத்தக் கோரி, அரசுக்கெதிராக நடந்த பேரணியில், மர்ம நபர்களால் இம்ரான் கான்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.