Header Ads



இனிமேல் இந்த வாகனத்தை மாத்திரமே இறக்குமதி செய்யலாம்


சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாட்டுக்கு இலத்திரனியல் கார்களை மட்டுமே இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


எதிர்காலத்தில் அரசாங்கத்துக்காக பெற்றுக்கொள்ளும் அனைத்து வாகனங்களும் இலத்திரனியல் வாகனங்களாக மட்டுமே இருக்குமென்றும், அதற்கான தீர்மானம் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் அந்நிய செலாவணிக்கிணங்க மின்சார காரை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் வசதிகளை செய்துகொடுத்துள்ளது.


அமைச்சரவை அதற்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. அதன்போது சில அமைச்சர்கள் மின்சார காருடன் ஹைபிறைட் காரையும் இறக்குமதிசெய்வதற்கும் அத்துடன் பெற்றோலில் இயங்கும் கார்களை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்குமாறும் கேட்டிருந்தனர். அதன்போது இலத்திரனியல் வாகனங்கள் கொள்வனவு செய்வது தொடர்பிலேயே அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. 


அதனையடுத்தே தம்மால் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டது. இனி நாட்டுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலத்திரனியல் வாகனங்களையே கொள்வனவு செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments

Powered by Blogger.