Header Ads



ஹர்த்தால் முன்னெடுக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு


- எஸ்.நிதர்ஷன் -


இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி அன்றையதினம் கடைகள், வர்த்தக நிலையங்களை மூடி, போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

 

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்க்பபட்டது.


நாளை 4ஆம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.


இது குறித்து வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,


யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒன்றிணைந்து பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளது.


இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கள், அடக்குமுறைகளை எதிர்த்தும், ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவம் எமது மண்ணிலிருந்து வெளியேறவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடக்கிலிருந்து கிழக்கு வரையான பேரணியொன்றைத் திட்டமிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


பேச்சுவார்த்தை எனும் போலி நாடகத்தினை தோலுரித்து சர்வதேச சமூகத்திற்கு காட்டவேண்டிய அவசியத்தாலும், கூட்டாக தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளை வலுவாக முன்வைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையிலும் குறித்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.


அந்த வகையில், தமிழ் மக்கள் மிகப் பேரெழுச்சியுடன் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளான பொங்கு தமிழ் எழுச்சியனூடாக வலியுறுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த தேசியம் என்பவற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கும் இப்பேரணியை மேலும் வலுப்படுத்துமாறு கோரியுள்ளனர்.


வடக்கு கிழக்குத் தழுவிய எமது வர்த்தக சமூகத்தினரையும், கடற்றொழிலாளர்கள், தனியார் மற்றும் அரச பேரூந்து உட்பட அனைத்து தொழிற் சங்கங்களையும் பெப்ரவரி 4 கரிநாள் அன்று தொழில் புறக்கணிப்பையும், முழுமையான கடையடைப்பையும் மேற்கொண்டு கர்த்தாலை முழுமையாக அனுஸ்டிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் சுதந்நதிர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதை சர்வதேச நாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்றும் உரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.


அத்துடன் இத்தினத்தில் உங்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள், தொழில் இடங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு காலாகாலமாக நாம் சிங்கள பெளத்த பேரினவாத அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழர் தேசமாக முன்னெடுக்கும் போராடத்தில் இணைத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    


முன்னெடுக்கப்படும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இப்பேரணியானது பெப்ரவரி 4ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி பெப்ரவரி 7ஆம் திகதி மட்டுநகரை வந்தடையும் அதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரெழுச்சசியாக மக்கள் வந்து இணைந்து  மாபெரும் பொது கூட்டத்துடன் பேரெழுச்சியாக நிறைவு பெறும்.


இப்பேரணிகளில் மாணவர்கள், மதத்தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் அனைவரும் அலை அலையாக இணைத்து தமிழ் தேசத்தின் நிலைப்பாட்டினை முழு உலகத்துக்கும் வெளிப்படுத்த அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.