Header Ads



பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் நேற்று வெளியாகியது


கொழும்பில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.


கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் கடந்த மாதம் கொழும்பு மருத்துவபீட மாணவி தனது காதலனால் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.


இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டமையே மாணவி சத்துரிகா ஹன்சிகாவின் மரணத்திற்கான காரணம் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (27) தீர்ப்பளித்துள்ளார்.


சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகள் என்பனவற்றை கவனத்தில் கொண்டதன் பின்னர் நீதவான் விசாரணை முடிவடைந்ததாக அறிவித்து இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.


இதன்படி, இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குருதுவத்தை பொலிஸாருக்கு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையின் போது, கொழும்பு குதிரை பந்தய பாதுகாப்பு அதிகாரி ஜெயசுந்தர மற்றும் உயிரிழந்த மாணவியின் நண்பரான அபேசிங்க ஆராச்சிகேயின் டொன் நிபுன் அபேசிங்க ஆகியோரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.


இதற்கமைய, சந்தேகநபரான கொழும்பு பல்கலைக்கழக மாணவரான பசிது சதுரங்க, சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.