Header Ads



2 பிக்குகளின் உதவியுடன் தப்பிய, பல கொலைகளின் சூத்திரதாரி


இலங்கையில் நடந்த பல கொலை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபருக்கு தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் இரண்டு பிக்குகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபரை ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதியாக செயற்பட்டவரும் இரண்டு பிக்குகளும் ஹெட்டிபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.


ஹெட்டிபொல ரிட்டதெனிய ஸ்ரீ ஜய லங்காராம விகாரையைச் சேர்ந்த பொத்தேவல இந்தசர மற்றும் திபுல்வெவே திபானந்தா ஆகிய இரு பிக்குகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதேவேளை சந்தேகநபர் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் காரின் சாரதியான திலான் என்ற 27 வயதுடைய இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தேடப்படும் சந்தேகநபரை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியதோடு, டுபாய்க்கு தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேகநபரிடம் இருந்து இரண்டு பைகளையும் கைப்பற்றியுள்ளனர்.


2022 டிசம்பரில் ஹன்வெல்ல பிரதேசத்தில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்றதற்காக சந்தேகநபர் தேடப்பட்டு வந்துள்ளார்.


சந்தேகநபரை அடையாளம் கண்டுகொண்ட பொலிஸார் நீதிமன்றில் பயணத்தடை பெற்று, இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.


எவ்வாறாயினும், சந்தேகநபர் போலி அடையாளத்தின் கீழ் டுபாய்க்கு தப்பிச் செல்ல முயன்று கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


இதன்போதே இரண்டு பௌத்த பிக்குகள் அவரை விடுவித்து தப்பிக்க உதவியுள்ளனர். TW

No comments

Powered by Blogger.