Header Ads



இஸ்லாம், கிறிஸ்தவ பாடத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் அநீதி - மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு



- நூருல் ஹுதா உமர் -


கல்வியற் கல்லூரிகளில்  கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்திற்கு மாணவ ஆசிரியர்களை உள்ளீர்ப்பதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிக்கான மய்யம் கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவில் புதன்கிழமை (08) முறைப்பா டொன்றினை செய்துள்ளது.


இம்முறைப்பாட்டினை சிரேஷ்ட சட்டத்தரணி சுகந்திகா பெர்ணான்டோ, நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச். இஸ்மாயில், நீதிக்கான மய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.


இது குறித்து நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி சஹ்பி எச். இஸ்மாயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த பல வருடங்களாக கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் சமய பாடநெறிகளுக்கு கல்வியல் கல்லூரிகளுக்கு சமமான எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் தமிழ் மொழி மூலமாக இந்து, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாம் பாட நெறிகளுக்கு கல்வியல் கல்லூரிகளில் 30 மாணவர்கள் உள்ளிருப்பு செய்யப்பட்டனர். 2016,2017 ஆண்டுகளிலும் மூன்று பாடநெறிகளுக்கு சமமானவர்களை உள்வாங்க பட்டிருந்தனர்.


2022 ஆம் ஆண்டு கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது இந்து சமய பாடத்திற்கு 20 மாணவர்களையும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ பாட நெறிகளுக்கு தலா 10 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க இருப்பதாக வர்தமானியில் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது.


இது இஸ்லாம், கிறிஸ்தவ பாட நெறிகளை தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு அநீதியாகும். அண்மையில் கல்வி அமைச்ச்சு சப்ரகமுவா மாகாணத்தை தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் மற்றும் தேசிய பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமான இஸ்லாம் பாட ஆசிரியருக்கு வெற்றிடம் இருப்பதாக கூறியுள்ள இந்நிலையில் இஸ்லாம் பாடநெறிக்கு  இம்முறை கல்வியல் கல்லூரியில் 10 மாணவர்களை மாத்திரம் அனுமதி வழங்க இருப்பது பாரிய சந்தேகத்தை எழுப்புகின்றது. 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படாததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


கிறிஸ்தவ பாடநெறியை பொறுத்தவரை கல்வி அமைச்சரின் அண்மைய வர்த்தமானியில் பல மாகாணங்களில், தேசிய பாடசாலையில் தமிழ்மொழி  மூலமாக கிறிஸ்தவ ஆசிரியருக்கு வெற்றிடம் இருப்பதாக கூறி இருக்கும் நிலையில் மேலும் கிறிஸ்தவ பாடமானது ரோமன் கத்தோலிக்கம், கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவம் என இரண்டாக பிரிந்து காணப்படும் நிலையில் இலங்கையில் உள்ள பல பாடசாலைகளில் இப்பாட ஆசிரியருக்கான வெற்றிடங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.


மேற்படி விடயம் தொடர்பாக உடனடி விசாரணை ஒன்றை நடத்தி கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை திருத்தம் செய்து இஸ்லாம் கிறிஸ்தவ பாட நெறிகளுக்கு அதிகமான மாணவர்களை உள்ளீர்ப்பு செய்ய ஆலோசனை வழங்குமாறு முறைப்பாட்டில் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.