Header Ads



துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கையரின் அடையாளம் மறைப்பு - அண்டக்யாவில் உடல் புதைப்பு


கடந்த 6ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த இலங்கையரின் உடல், துருக்கியிலுள்ள அண்டக்யா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று(14) தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் பதினாறு இலங்கையர்களின் நலனைக் கண்டறிவதற்காக, துருக்கி அதிகாரிகளுடன் அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது.


அதன்படி, அவர்களில் 15 பேருடன் தூதரம் தொடர்பு கொண்டதுடன், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தூதரகம் உறுதிசெய்தது.


அதே நேரத்தில் துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் அண்டக்யா நகரில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது.


இந்தநிலையில், காணாமல்போயிருந்த குறித்த பெண் கடந்த 12 ஆம் திகதி, இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக தூதரகம் அறிவித்தது. எவ்வாறாயினும், குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க, உயிரிழந்த இலங்கையரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.


சுகாதார அதிகாரிகளால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க, அவரது உடல் எச்சங்கள் அண்டக்யாவில் அடக்கம் செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.