Header Ads



தேசிய அணித் தலைவராக முஸ்லிம் ஒருவர் நியமனம் - இது வரலாற்றில் முதல்முறை


இலங்கையின் தேசிய கபடி அணியின் தலைவராக - வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் தெரிவாகியுள்ளார். கிழக்கு மாகாணம் - நிந்தவூரைச் சேர்ந்த 25 வயது எம்.ரி.அஸ்லம் சஜா என்பவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய கபடி அணியின் தலைவராக - இதற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திலிருந்து எவரும் நியமிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பாடசாலைக் காலத்திலிருந்து கபடி விளையாடி வரும் இவர், 2016ஆம் ஆண்டு, ஈரானில் நடைபெற்ற 'நான்காவது சர்வதேச ஜுனியர் கபடி சாம்பியன்ஷிப்' போட்டியில், இலங்கை அணி சார்பாகக் கலந்து கொண்டதன் மூலம் - பரந்தளவிலான கவனத்தைப் பெற்றார். அந்தப் போட்டித் தொடரில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.


கபடி விளையாட்டில் அஸ்லம் சஜா - காட்டி வரும் அதீத திறமை காரணமாக, சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான பல சந்தர்ப்பங்கள் அவருக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன.


2018ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற 'ஆசியன்' கபடிப் போட்டி, 2020ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற 'பங்கபந்து' (Bangabandhu) சர்வதேச கபடி கிண்ணப் போட்டி ஆகியவற்றில் விளையாடியதோடு, 2021ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற 'பர்ஸ்ட் டிவிசன்' (First Division) கபடி லீக் போட்டி தொடரில், பங்களாதேஷின் 'மெக்னா கிளப்' எனும் அணிக்காகவும் அஸ்லம் சஜா விளையாடினார்.


2022ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடந்த 'பங்கபந்து' தொடரிலும் இலங்கையின் தேசிய அணி சார்பாக இவர் கலந்து கொண்டார். இதன்போது தேசிய அணியின் உப தலைவராக சஜா பொறுப்பேற்றிருந்தார்.


இவை மட்டுமன்றி இந்தியாவில் நடந்த 'ப்ரோ ((Pro) கபடி லீக்' போட்டித் தொடரில், இந்தியாவின் 'பெங்கல் வாரியஸ்' (Bengal Warriors) அணிக்காகவும் இவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அஸ்லம் சஜா விளையாடிய சர்வதேச கபடி போட்டிகளில் - ஆட்ட நாயகன் மற்றும் போட்டித் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்.


12 பேரைக் கொண்ட தேசிய கபடி அணியில் அஸ்லம் சஜா உட்பட மூன்று முஸ்லிம் வீரர்கள் உள்ளனர். அந்த மூவருமே நிந்தவூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து சர்வதேச கபடிப் போட்டியில், அஸ்லம் சஜா தலைமையிலான தேசிய அணி கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் பங்களாதேஷ், இங்கிலாந்து, கென்யா, நேபாளம், ஈராக் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்குபற்றுகின்றன.


பாடசாலைக் காலத்தில் ஏனைய மாணவர்கள் கபடி விளையாடுவதைப் பார்ப்பதற்காக வரும் அஸ்லம் சஜா, அந்த விளையாட்டின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால், தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுப் பெற்று, அதன் போது வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார், அவரின் தனிப்பட்ட பயிற்சியாளர் எஸ்.எம். இஸ்மத்.


அரச பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றும் இஸ்மத், தேசிய மற்றும் சர்வதேச மட்ட கபடிப் போட்டிகளில் மத்தியஸ்தராகப் பணியாற்றி வருகின்றார்.


அஸ்லம் சஜா முதன் முதலாக கபடி விளையாடத் தொடங்கியதிலிருந்து அவரின் பயிற்சியாளராக இஸ்மத் செயற்பட்டு வருகின்றார்.


"தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்வருக்கு உதாரணமாக அஸ்லம் சஜாவைக் குறிப்பிட முடியும்" என்கிறார் இஸ்மத்.


"2014ஆம் ஆண்டு பாடசாலைக் காலத்தில் கபடி விளையாட்டில் தனது திறமையை வெளிக்காட்டிய அஸ்லம் சஜா, 07 வருடங்களின் பின்னர் தேசிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை பாராட்டுக்குரியது" என புகழ்கிறார்.


தேசிய கபடி அணியின் தலைவர் பொறுப்பை அடைந்து கொள்வதற்காக, அஸ்லம் சஜா நிறைய தியாகங்களைச் செய்துள்ளதாகவும் அவரின் பயிற்சியாளர் குறிப்பிட்டார்.


"2016ஆம் ஆண்டு நிந்தவூர் அல் மதீனா பாடசாலையிலிருந்து 'தேசிய ஜுனியர் சாம்பியன்ஷிப்' கபடிப் போட்டியில் அஸ்லம் சஜா கலந்து கொண்டார். அதனையடுத்து அதே பாடசாலையிலிருந்து இரண்டு பேர், 'ஜுனியர் வேல்ட் கப்' போட்டிகளில் கலந்து கொண்டார்கள்" எனக் கூறிய பயிற்சியாளர் இஸ்மத், "கபடி விளையாட்டில் அஸ்லம் சஜா - அவரின் ஊரைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தூண்டுதலாக இருந்து வருகிறார்" என்கிறார்.


தேசிய கபடி அணியின் தலைவராக அஸ்லம் சஜா நியமிக்கப்பட்டுள்ள போதும், இந்த இடத்தைப் பெறுவதற்காக அவர் பல்வேறு சவால்களைத் தாண்டியிருப்பதாக பயிற்சியாளர் இஸ்மத் கூறுகின்றார்.


"கபடிப் போட்டிகள் பிரதேச மட்டத்திலிருந்து சர்வதேச மட்டங்கள் வரை, 'மற்' (Mat) விரிக்கப்பட்ட உள்ளக அரங்குகளில்தான் நடைபெறுகின்றன. ஆனால், அஸ்லம் சஜா - மணல் வெளியிலும், புற் தரைகளிலும்தான் விளையாடி பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார். அவரின் ஊரில் கபடி விளையாடுவதற்கான 'மற்' (Mat) விரிக்கப்பட்ட உள்ளக அரங்க வசதிகள் இல்லை".


"தேசிய கபடி அணியில் அஸ்லம் உட்பட - நிந்தவூரைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உள்ளபோதும், இங்கு கபடி பயிற்சியில் ஈடுபடுவதற்குரிய அரங்குகள் எவையுமில்லை. கபடி பயிற்சியில் ஈடுபடுவதற்கான வசதிகளை ஊரில் ஏற்படுத்தித் தருமாறு - அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் பல தடவை கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை" என, இஸ்மத் கவலைப்படுகின்றார்.


புற் தரைகளில் விளையாடி பயிற்சி பெற்று - சர்வதேச போட்டிகளில் பங்குபற்றிய அனுபவங்களை பிபிசி தமிழிடம் அஸ்லம் சஜாவும் பகிர்ந்து கொண்டார்.


இலங்கையின் தேசிய கபடி அணியில் 12 வீரர்கள் உள்ளனர். அவர்களில் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முஸ்லிம்களும், இரண்டு தமிழர்களும் விளையாடுகின்றார்கள்.


அஸ்லம் சஜா தலைமையில், அஷான் மிஹிரங்க (உப தலைவர்), துலான் மதுவன்த, பென்சி ராசோ, நிரூத பதிரன, அகில லக்ஷான், மஹீஷிக ஜயவிக்ரம, மொஹமட் நப்ரீஸ், மொஹமட் சபிஹான், உசித ஜயசிங்க, ஏ. மோகன்ராஜ், வசன்த இதுனில் ஆகியோர் தேசிய அணிக்கு விளையாடுகின்றனர்.


யூ.எல். மப்றூக்  பிபிசி தமிழுக்காக

No comments

Powered by Blogger.