Header Ads



தனியார் பல்கலைக்கழகத்திற்கு நிகராக கல்முனையில் உதயமாகிறது CMT Campus..!



கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 வருட காலமாக உயர்கல்வித் துறைக்கு பாரிய பங்களிப்பு செய்து வருகின்ற Comtech எனும் College of Management and Technology (CMT Campus) மலேசியாவின் முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றுடன் கூட்டிணைக்கப்பட்டு, தனியார் பல்கலைக்கழகத்திற்கு நிகராக கல்முனை மாநகரில் நாளை புதன்கிழமை (04) திறந்து வைக்கப்படவுள்ளது.

மலேசிய நாட்டின் மலாக்கா மாநிலத்தின் ஆளுநரும் மலேசியாவின் இரு முக்கிய பல்கலைக்கழகங்களின் வேந்தரும் மலாய் இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் (DMDI) ஸ்தாபகத் தலைவருமான கலாநிதி துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.


CMT Campus.தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் விஷேட அழைப்பின் பேரிலேயே ஆளுநர் கலாநிதி துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்.


மலேசியாவின் முக்கிய அரசியல் தலைவரான கலாநிதி துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் ஆளுநர் பதவிக்கு முன்னதாக மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று தடவைகள் பதவி வகித்திருக்கிறார்.


அத்துடன் மலேசியாவின் UNIMEL மற்றும் UTeM ஆகிய பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் தற்போது பதவி வகிக்கிறார்.


இவற்றுள் UNIMEL பல்கலைக்கழகத்துடனேயே CMT Campus கூட்டிணைப்பு (Affiliated) செய்யப்பட்டுள்ளது.


பல தசாப்த காலமாக மலேசியாவின் அரசியல், கல்வி, வர்த்தகம் மற்றும் சமூகத் தளங்களில் முக்கிய புள்ளியாகத் திகழ்கின்ற ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்களுடன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மிகவும் நெருக்கமான நட்பினைக் கொண்டிருக்கின்ற கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்கள், இவரது அனுசரணையுடன் இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மலேசியாவில் உயர் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.


இதன் தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டுமென்ற தனது நீண்ட கால தூரநோக்கு சிந்தனையை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கான அடித்தளமாகவே ஏ.எம்.ஜெமீல் அவர்களினால் மலேசிய UNIMEL பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைப்பு செய்யப்பட்ட CMT Campus கல்முனையில் திறக்கப்படுகிறது.


மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மூலமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாணத்தில் முதலாவது தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் முயற்சியில் முனைப்புக்காட்டி வருகிறார்.


ஒரு சில புள்ளிகளால் பல்கலைக்கழக வாய்ப்பை இழக்கின்ற மாணவர்களையும் உயர் கல்விக்கும் தொழில்துறைகளுக்கும் முறையான வழிகாட்டல்களின்றி தடுமாறுகின்ற இளையோர்களையும் தனியார் பல்கலைக்கழகம் ஊடாக பட்டதாரிகளாக்கி, தொழில் தகைமையுள்ளோராக உயர் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நீண்ட கால இலக்கு, இறைவன் உதவியுடன் தனது குருவான மலாக்கா ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் ஊடாக நிறைவேறும் என்று அவர் திடமாக நம்புகிறார்.


எமது நாட்டில் பல நிறுவனங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழக கற்கைகள் என்ற போர்வையில் போலியான பட்டங்களை வழங்கி, மாணவர்களை ஏமாற்றும் படலம் தொடர்கின்ற சூழ்நிலையில், உண்மையான பல்கலைக்கழகங்களுடன் கூட்டிணைப்பு செய்யப்பட்டிருக்கின்ற CMT Campus ஊடாக தொழில் தகைமையுடன் கூடிய அர்த்தமுள்ள பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை தயார் செய்து, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழிற்சந்தைக்கு முகம்கொடுக்கவல்ல பட்டதாரிகளை உருவாக்கும் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தயாராகியிருக்கிறோம் என்று அவர் ஆணித்தரமாகக் கூறுகின்றார்.


கடந்த காலங்களில் மலேசிய, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்களை பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளுக்காக வெற்றிகரமாக அனுப்பிய வரலாறு கொம்டெக் (CMT Campus) இற்கு உண்டு.


தென்கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களை தயார்படுத்துவதில் பாரிய பங்களிப்பு செய்துள்ள கொம்டெக் (CMT Campus), ஜி.சி.ஈ.சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்குத் தோற்றிய மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாட நெறிகளை போதிப்பதிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறது.


கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்துடன் கூட்டிணைக்கப்பு செய்யப்பட்ட (Affiliated) தனியார் பல்கலைக்கழகமொன்றை  நிறுவுவதற்கான வாய்ப்பு CMT Campus இற்கு கிடைத்திருக்கிறது.


CMT Campus இன் பிரதான நிர்வாக அலுவலகமே கல்முனையில் நாளை திறக்கப்படுகின்றது. இதன் கல்வி வளாகங்களுக்கான கட்டிடத் தொகுதிகளை அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன - என்றும் அதன் தவிசாளர் ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.


எம்.எம்.அஸ்லம்

No comments

Powered by Blogger.