Header Ads



கால்பந்து தேர்தலில் சதி - அமைச்சரையும், அடியாட்களையும் சாடுகிறார் ஜஸ்வர் உமர்


(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு குறித்த அறிக்கை நேற்று (13) அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை இன்று (15) பிரசுரிக்கிறோம்


விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அவரது  அடியாட்களும் என்னதான் சதி செய்தாலும் நாம் சளைக்க மாட்டோம்.நாளை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.-கால்பந்து சம்மேளன முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர்.


இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தமக்கு எதிராக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மேன்முறையீட்டு குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அதன் பிரதி எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.  தேர்தலில்   நிச்சயம்  போட்டியிடுவதாகும் அவர் தெரிவித்தார்.


 மேல்முறையீடுகள் தொடர்பாக பேச தனக்கு அழைப்பு  விடுக்கப்படவில்லை . ஆலோசனை கூட கேட்கவில்லை என்று ஜஸ்வர் உமர் தெரிவித்தார். இயற்கை நீதியின் கொள்கைகளின்படி, ஒரு நபர் உண்மைகளை முன்வைத்து தன்னை  நிரபராதி என நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு  தனக்கு எந்த வாய்ப்பும் வழங்காததால் தனது அடிப்படை உரிமை  மீறப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.


தான் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின்  செயலாளராக இருந்தபோது 2018 ஆம் ஆண்டு மணிலால் பெர்னாண்டோ மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகரித்ததா இல்லையா என்பது தொடர்பான விடயமே  தற்போதைய குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது.கோப் குழுவோ அல்லது வேறு எந்தக் குழுவோ தன்னை ஒரு போதும் குற்றவாளியாக அறிவிக்கவில்லை  என்றும் ஜஸ்வர் உமர் வலியுறுத்துகிறார்.


இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு பார்க்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் நோக்கம்  இந்த பதவியில் தமக்கு விருப்பமான அடியாட்களை நியமிப்பதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தலுக்கு அழைப்பு விடுத்து விளையாட்டு விதிமுறைகளை திருத்துவது, புதிய திருத்தத்தில் சிலரை குறிவைத்து அவர்களை தேர்தலில் இருந்து நீக்க முயற்சிப்பது, நீதிமன்ற விடுமுறையின் போது  விளையாட்டு விதிமுறைகளை  வெளியிடுவது, மேன்முறையீட்டு சபைக்கு விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் வழங்காதது, தேர்தல் நடத்த சில மணி நேரம் இருக்கையில் வேட்பாளர் ஒருவரை நீக்க முயற்சிப்பது ,ஒரு வேட்பாளரை மேல்முறையீடு செய்யவோ அல்லது நீதித்துறை நிவாரணம் பெறவோ கூட அவகாசம் கொடுக்காமல் இருப்பதன் மூலம் இங்கு தெளிவான சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


நிச்சயமாக நாளை தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதில் வெற்றி பெறுவேன் என்றும் கூறிய ஜஸ்வர் உமர், இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி தனக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுவது அப்பட்டமான பொய் என்றும் அவர் தெரிவித்தார் . மேல்முறையீட்டு குழு அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தை காட்டி பொய்யை  சமூக மயப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அசிங்கமானது மற்றும் அவமானகரமானது என்றும்  ஜஸ்வர் உமர் கூறினார்.  விளையாட்டுக்குள் அரசியலை திணிக்க முயல்வதால் விளையாட்டுத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும்  இதனூடாக அமைச்சருக்கு அவப் பெயர் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.