Header Ads



கோட்டாவிடம் வாக்குமூலம் பெறாமை பற்றி நீதவான் கோபம், பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் வாதம்


ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 1,78,50,000 ரூபா பணம் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகேவினால் பொலிஸ்மா அதிபருக்கு இன்று -25-  உத்தரவிடப்பட்டது. 


குறித்த பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெறுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அந்த உத்தரவு இதுவரை செயற்படுத்தப்படாமை இன்று நீதிமன்றத்தில் வௌிக்கொணரப்பட்டது. 


இந்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிலிருந்து அகற்றப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு  ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பொலிஸ்மா அதிபரின் குறித்த உத்தரவு சட்டவிரோதமானது எனவும், அவ்வாறு செய்தமையினால் பொலிஸ்மா அதிபர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆகியோர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர். 


விசாரணைகள் பொலிஸ் திணைக்களத்தின் எந்த பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டாலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலத்தை பெறுவது உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகளை தாமதப்படுத்தவோ தவிர்த்தோ ஒருபோதும் செயற்பட முடியாது எனவும் நீதவானால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டது. 

No comments

Powered by Blogger.