Header Ads



தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்ற வேலுகுமார் மக்கள் ஆணையில்லாத அரசுடன் இணையமாட்டார்


வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயலாற்றும் குளோபல் கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா நுவரெலியாவில் இடம்பெற்றது.


இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 210 பேர் இந்த பட்டமளிப்பு விழாவில் தங்களுடைய பட்டங்களை பெற்றுக் கொண்டனர்


இந்நிகழ்விற்கு கல்லூரியின் பணிப்பாளர் செல்லதுரை பிரதீஸ் குமார் தலைமை தாங்கியதுடன் பிரதம அதிதியாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.


அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நாகர்கோவில் மாவட்டங்களில் இருந்து வருகை தந்த நடனத்துறை கலைஞர்களும், ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பின், அவரிடம் ஊடகவியலாளர்கள் வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது கூட்டணியின் முடிவுக்கு மாறாக (நடுநிலை) வேலுகுமார் செயற்பட்டமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் இவ்வாறு குறிப்பிட்டார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, தமிழ் முற்போக்கு கூட்டணியில் தற்போது உள்ள ஐவரும் பஞ்ச பாண்டவர்கள்போல் அண்ணன் தம்பிமார். எங்களுக்குள் ஏற்படும் சிற்சில பிரச்சினை அண்ணன், தம்பிமாருக்கிடையில் ஏற்படும் குடும்ப பிரச்சினைபோன்றுதான். அதனை நாம் எங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்வோம். அந்த வகையில் இப்பிரச்சினையும் விரைவில் தீரும் இணைந்து பயணிப்போம். ஜனநாயக கட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள்தான் அமைப்பை சரியாக வழிநடத்த உந்துசக்தியாக அமையும். நாரதர் கலகம் நன்மையிலேயே முடியும் என்பார்கள். இந்த ஆரோக்கியமான சண்டையும் நன்மையில் முடிவும் என்றே நம்புகின்றேன்.


தான் எடுத்த முடிவு சம்பந்தமாக வேலுகுமார் எமக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கின்றோம். அவர் அரசு பக்கம் செல்லமாட்டார்.


அதேவேளை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக எமக்கும் ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார். அந்த சந்திப்பில் நாமும் பங்கேற்போம் என்றார்.


-கிரிஷாந்தன்-

No comments

Powered by Blogger.