Header Ads



முஸ்லிம் சட்டதிருத்த பிரச்சினையை தீர்க்கக்கூடியதாகவிருந்தது, யூசுப் அல் கர்ளாவி கூறியதை ஞாபகமூட்டிய ஹக்கீம்


சிறுபான்மையினராக வாழ்கின்ற போது, முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடுகளை  முன்னுதாரணமாகக் கொள்வதிலிருந்து  தவிர்ந்து கொள்ள வேண்டும்  எனக் குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம்கள் ஓர் ஆண் ஆதிக்க சமூகத்தினர் "என்று ஒரு பார்வை இருப்பதாகவும் ,அதிலிருந்து  விடுபடுவதும் முக்கியமான பிரச்சினையாக இருப்பதாகவும் கூறினார்


 அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எழுதிய “நபிகளாரின் சமூக உறவு” என்ற நூலின் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவற்றைக்  குறிப்பிட்டார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,


குறிப்பாக ,யுத்தத்தின் முடிவோடு சேர்த்து,அன்றைய ஆட்சியாளர்களுடைய பார்வையில் "புலிகள் அழிந்தாகிவிட்டது. இனி எங்களுக்கு யாராவது  எதிரியை வரித்துக் கொள்ளவேண்டும்" என்று முஸ்லிம் சமூகத்தை தேர்ந்தெடுத்து விட்டார்கள். எல்லா இடங்களிலும் ,முஸ்லிம்களுடைய எல்லா விவகாரங்களிலும் மிகப் பெரிய சவால்களை நாங்கள் எதிர்நோக்கினோம். 


பெண்களின் உடையாக இருக்கட்டும், ஹலால் உணவாக இருக்கட்டும் ,இயல்பாக அதிகரிக்கின்ற  சனத்தொகைப் பெருக்கமாக இருக்கட்டும் இப்படி இன்னோரன்ன விடயங்களில் எங்களோடு முரண்பட்டுக் கொள்கிற, எங்களுக்கு எதிரான இல்லாத பொல்லாத வதந்திகளையும்,விஷமத்தனமான செய்திகளையும் பரப்பிக் கொண்டிருக்கிற நிறைய பேர் இருக்கின்றார்கள் அதற்கு ஆங்காங்கே அரச அனுசரணையும் கிடைப்பதான ஒரு நிலைவரம் தென்பட்டதுதான் எங்கள் எல்லோருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது 


நாங்கள் வாழ்கின்ற இந்தப் பிராந்தியம் ஒரு சாமானியமான பிராந்தியமல்ல ,இந்தப் பிராந்தியத்தில் முழு உலகிலும் வாழ்கின்ற முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் வாழ்கின்றோம்.

அதில் இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டும்தான் சிறுபான்மையினராகவாழ்கிறோம். எனவே எங்களுக்கு இருக்கிற மிகப் பெரிய முன்னுதாரணம் இந்திய முஸ்லிம்கள்தான்,அவர்களுடைய போராட்டம்தான். 


இங்கு  அமைச்சர்அலி சப்ரி  பேசுகின்ற போது,  சவூதி அரேபியா சீர்திருத்தங்களை மேற்கொண்டுவருவதாகச் சிலாகித்துக் கூறினார்.எங்களைப் பொறுத்தமட்டில் இவ்வாறான முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளை  முன்னுதாரணமாக கொள்வதிலிருந்து நாங்கள் தவிர்ந்து கொள்ளவேண்டும்.


 ஏனென்றால்  முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் அவர்களுடைய பழக்கவழக்கங்களாக இருக்கட்டும், அவர்களுடைய செயற்பாடுகளாக இருக்கட்டும், இஸ்லாமிய சட்டத்தின் செயற்பாடுகளாக இருக்கட்டும் அவற்றில் நெகிழ்வுத் தன்மை என்பதற்கான ஓர் இடம் உருவாகியிருக்கிறது. இதை பல அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். பிக்ஹுல் அகல்லியாத் என்ற ஒரு தனியான துறையே இருக்கிறது. அது முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில்  பிக்ஹு  சட்டம்  ஓரளவு நெகிழ்வுத் தன்மையோடு பயன்படுத்தப்படவேண்டும் என்பதைக் கூறுகின்றது.


ஒற்றுமை அனைத்தையும் சாதிக்கும் , நாங்கள் அரசியல் அணிகளாகப் பிரிந்திருக்கலாம் .அதுவல்ல பிரச்சினை.

 எங்களை விட்டு பிரிந்த இந்த யுகத்தின் மிகச் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் அஷ்ஷெய்க் யூசுப் அல் கர்ளாவியை சில வருடங்களுக்கு முன்னர் கட்டாரில் சென்று சந்தித்த போது ,இலங்கையில்  முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகளைச் சொன்னோம் ,நிறைய குறைகளைத்தான் சொன்னோம்


 அவற்றை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு,கைகளைப் பற்றிக் கொண்டு, " ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நான் எகிப்தைச் சேர்ந்தவன் ,எகிப்து என்றால் அறபுலகில் ஆகக்கூடிய சனத் தொகையைக் கொண்ட நாடு, முழு அறபுலகிலும் அரைவாசித் தொகையினர் எகிப்தில் வாழுகிறார்கள் ,அந்த நாட்டில் பிறந்தவன் நான் .இன்று நான் அகதியாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.ஆனால், நாங்கள் செய்கின்ற அரசியலை நீங்கள் செய்யக்கூடாது"என்றார்.   "நீங்கள் எல்லோரும் எந்த அணியில் இருந்தாலும் சரி ஒற்றுமையாக இருங்கள் " என மிகத் தெளிவாகச் சொன்னார் . "ஒற்றுமை என்பதுதான் முக்கியம் அதை நீங்கள் மிக உன்னிப்பாகக் கடைப்பிடிப்பீர்களானால், முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருக்கின்ற  முஸ்லிம்களை விடவும் நீங்கள் பலமாக இருப்பீர்கள்"என்றார்.


 இவை அவர் சொன்ன வார்த்தைகள், இன்றும் கூட நாங்கள் அவற்றை மறக்கவில்லை.

 நாங்கள் அணி பிரிந்து அரசியல் செய்கிறோம் என்ற காரணத்தினால்    முஸ்லிம் சமூகம் பிளவுபட்டுப் போயிருக்கிறது என்று நினைக்கிறார்கள்.

எங்களுக்கு நிறைய சர்ச்சைகள் வரும் ,ஆட்சியாளர்கள் எவற்றை செய்யப்போகிறார்கள் என்ற விஷயத்தில் பிரளயங்கள் உருவாகும். இந்திய முஸ்லிம்களுக்குப் போன்று இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கும்  தனியார் சட்டம் சம்பந்தமான விவகாரத்தில் அடிக்கடி சர்ச்சைகள் வரும். தனியார் சட்டங்கள் இல்லாமல் செய்யப்பட்டு அவற்றை பொதுச் சட்டத்திற்கு கீழ்  வரவேண்டும் என்ற நிர்பந்தம் வரும், இதை எப்படி எதிர் கொள்வது என்பதில் நிறைய சிக்கல்களும் வரும்.


பாராளுமன்றத்தில்  முஸ்லிம் விவாக,விவாகரத்துச் சட்டம்,  அதை திருத்துவது என்று அதற்கென்று அமைச்சரவையில் ஒரு பத்திரம் சமர்பிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்டு சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் என்னைச் சந்தித்தார்கள். 



நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கூடி அந்த விடயத்தை மிகவும் தெளிவாக, அதிலிருக்கும் சிக்கல்களை நாங்கள் விளங்கப்படுத்திச் சொன்னோம். எந்த சிக்கலுமில்லாமல் பிரச்சினையை தீர்க்கக்கூடியதாகவிருந்தது ஆனால் ,இடையில் ஒரு சின்னச் சிக்கல் .எங்களுடைய பெண்கள் சார்பாக வருகை தந்திருந்த பிரதிநிதிகளின் கருத்துக்களையும் மனதில்கொள்ளவேண்டும்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இருக்கிற மிக முக்கியமான விமர்சனங்களில் ஒன்று பெண்கள் சம்பபந்தப்பட்டதாகும்.அதில் இருந்து நாங்கள் விடுபடவேண்டும்,முஸ்லிம்கள் "ஓர் ஆணாதிக்க சமூகம்". என்ற ஒரு பார்வை இருக்கிறது. அதிலிருந்து எப்படி விடுபடுவது என்ற முக்கியமான பிரச்சினை இருக்கிறது.  ஒருசாரார்,பெண்களின் உடைகளின் தெரிவு உட்பட ஆண்கள்தான்  கட்டாயப்படுத்துகின்றனர் என்கின்றனர்.


பிரஸ்தாப கலந்துரையாடலில்,பலதாரமணம் சர்ச்சைக்குரிய விடயமாகப் போய்விட்டது, பலதாரமணத்திற்கான  அனுமதியை இல்லாமல் செய்யவேண்டும் என்பது முக்கியமான ஒரு விடயமாக மாறிவிட்டது.அரசாங்கம் அதை நீக்குவது என்பதற்கும் சட்ட நகலைத் தயாரித்துவிட்டது.


 இதைத்தான் நாங்கள் கலந்துரையாடியபோது மிகத் தெளிவாக விவகாரங்களில் உடன்பாடு கண்டோம்.  முக்கியமான நிபந்தனைகளின் அடிப்படையில் அதை நாங்கள் அனுமதிக்கலாம், ஆனால் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.   ஆனால் அதை முழுக்க, முழுக்க இல்லாமல் செய்வதற்கான முயற்சிக்கு இடமில்லை.ஏன் எமக்குரிய சட்டத்தையே எடுத்துவிட்டு ,பொது நீதி மன்றங்களில் வழக்காடச் செய்யவேண்டும், என்றும் ,காதி நீதி மன்றங்களை இல்லாமல் செய்யவேண்டும் என்றும்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவற்றை ஒரு பேச்சுவார்த்தை மூலம்   எல்லா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமைப்பட்டதனால்    சாதிக்கமுடிந்தது. அமைச்சரும் எங்களுடைய அந்த வாதத்தை மிகத் தெளிவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், நாங்கள்  அவற்றை முன்வைத்தோம். 


ஆனால், துரதிர்ஷ்டவசமாக எங்களுடைய சகோதரிகளோடு தேவையற்ற முரண்பாடுகள் வருவதுதான் பிரச்சினையாக இருக்கிறது. அவர்களை நாங்கள் சிநேகபூர்வமாக அணுகி விடயங்களைத் தெளிவுபடுத்தவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.