Header Ads



''இதுகுறித்து நான் மேற்கொண்டு எதுவும் சொல்லப்போவதில்லை"


தமது முன்னாள் காதலியின் நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நேற்று வரை பதவி வகித்தவருமான பேராசிரியர் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக காணொளி மற்றும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.


ஆனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவின் தேசிய அமைப்பாளருமான ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆஷு மாரசிங்கவின் முன்னாள் காதலி ஆதர்ஷா கரந்தனா ஆகியோர் வெளியிட்ட காணொளி உண்மையானதல்ல என்றும் அது எடிட் செய்யப்பட்டது என்றும் ஆஷு மாரசிங்கவின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரந்தனா ஆகியோர் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆஷு மாரசிங்க மீது மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தனர்.


ஆஷு மாரசிங்கவுக்கு எதிரான இந்த ஊடக சந்திப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர், 'ஜனாதிபதியின் ஆலோசகர்' எனும் பதவியை ஆஷு மாரசிங்க ராஜிநாமா செய்தார்.


''இந்தப் பொய்யான நிகழ்வு இப்போது நீதிமன்றத்தின் கையில் உள்ளது; எனவே இது குறித்து நான் மேற்கொண்டு எதுவும் சொல்லப்போவதில்லை,'' என்று ஆஷு மாரசிங்க கூறியுள்ளார்.


"எனது கட்சிக்காரர் ஆஷு மாரசிங்க தொடர்பான ஓர் அருவருக்கத்தக்க, போலியான காணொளி உலவுகிறது," என்று ஆஷு மாரசிங்கவின் வழக்குரைஞர் பிரவி கருணாரத்ன கூறியுள்ளார்.


''குறிப்பிட்ட செய்தியாளர் சந்திப்புக்கு முன்னரே எனது கட்சிக்காரர் இந்த அச்சுறுத்தல் குறித்து சி.ஐ.டி-யிடம் புகாரளித்துள்ளார். எனது கட்சிக்காரரும் ஒரு பெண்ணும் இயக்குநராக ஒரு நிறுவனத்தில் இருக்கிறார்கள். அதில் நிலவும் பிரச்னையைத் தீர்க்க அவரிடம் பெரும் தொகை கேட்கப்பட்டது,'' என்று கூறியுள்ள அவர் சி.ஐ.டி-யிடம் ஆஷு மாரசிங்க வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


'ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட' காணொளி

ஆஷு மாரசிங்க நாய் ஒன்றை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது போன்ற படங்கள் மற்றும் வீடியோகளையும் அவர்கள் அந்த செய்தியாளர் சந்திப்பில் காண்பித்தனர். எனினும், அந்தப் படங்கள் மற்றும் காணொளிகள் உண்மைத் தன்மையை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.


ஆஷு மாரசிங்கவுடன் சில காலம் ஒரே வீட்டில் வாழ்ந்த அவரின் முன்னாள் காதலி ஆதர்ஷா கரந்தனா, ஆஷு மாரசிங்கவின் மேற்படி நடத்தையை தனது கைப்பேசியில் ரகசியமாக ஒளிப்பதிவு செய்தாக இதன்போது விவரித்தார். ஆதர்ஷா செல்லமாக வளர்த்து வந்த நாயுடனேயே, ஆஷு மாரசிங்க இவ்வாறு பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா, ஊடகவியலாளர்களுக்கு காண்பித்த படங்களில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க நாயிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொள்வது போன்ற காட்சிபதிவாகியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கான வீடியோக்கள் தம்மிடம் நான்கு ஹார்ட் டிஸ்கில் உள்ளன என்றும் ஹிருணிகா பிரேமசந்திர கூறினார்.


”நாட்டின் ஜனாதிபதியினுடைய அரசியல் ஆலோசகர்தான் இவ்வாறு நடந்துள்ளார். நாட்டின் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின்படி, 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாக இது உள்ளது. வாய்பேச முடியாத அப்பாவி விலங்குகளை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றமை - ஒரு வகை மன நோயாகும். நாட்டின் ஜனாதிபதியினுடைய ஆலோசகரின் மனநிலை இப்படியிருந்தால், ஜனாதிபதியின் மனநிலை எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள்” என, இதன்போது ஹிருணிகா குறிப்பிட்டார். இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.”


இந்த சம்பவத்தை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார் என்பது ஒரு விடயமல்ல. இச்சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியிடம் நான் கேட்க விரும்புகிறேன்" என்றார் ஹிருணிகா பிரேமசந்திர.


ஆஷு மாரசிங்கவுடன், தான் 'பேஸ்புக்'கில் நட்பானதாகவும், பின்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாமல், ஒரே வீட்டில் இரண்டு வருடங்கள் இருவரும் வாழ்ந்ததாகவும் இதன்போது ஆதர்ஷா கரந்தனா கூறினார். மாரசிங்கவுடன் வாழ்ந்த காலப்பகுதியில், தான் வளர்க்கும் 'சிஹிரோ' எனும் நாய்க்குட்டியின் நடத்தையில் சில மாற்றங்களைக் கண்டதாகவும், அதனையடுத்து என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதனையடுத்து, ஆஷு மாரசிங்கவுக்குத் தெரியாமல் தனது கைப்பேசியின் மூலம் இந்த சம்பவத்தை பதிவு செய்து கொண்டதாகவும் அவர் கூறினார். "ஒரு நாள் எனது கைப்பேசியை படுக்கையறையில் ரகசியமாக வைத்து விட்டுவந்து, பிறகு அதனைப் பார்த்தபோது, அதில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது" என்கிறார் ஆதர்ஷா.


ஆஷு மாரசிங்கவின் இந்த செயல் குறித்து, ஜனாதிபதியின் மனைவி மைத்ரி விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு தான் முறையிட்டதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆதர்ஷா மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். தனது செல்லப் பிராணி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டமை தொடர்பில், விலங்குகள் நலன் தொடர்பில் செயற்படும் அமைப்புகள் மற்றும் நபர்கள் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்றும், இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார். மாரசிங்கவுடன் வாழ்ந்த காலப்பகுதியில், அவரால் உடல் ரீதியாக தான் துன்புறுத்தப்பட்டதாகவும் இதன்போது ஆதர்ஷா குற்றஞ்சாட்டினார்.


ஆதர்ஷா கரந்தனா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான காலிமுகத் திடல் 'அரகலய' போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்திருத்த ஒருவராவார். முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் ஆஷு மாரசிங்கவுக்கு எதிராக மிகப் பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதும், அவர் இது குறித்து கருத்துகள் எவற்றினையும் வெளியிடவில்லை.


51 வயதாகும் ஆஷு மாரசிங்க, 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.


இவர் நாடாளுமன்றத்தில் அரசாங்க தரப்பு உதவி பிரதம கொறடா (Assistant Chief Government Whip of the Parliament), மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியான ஆஷு மாரசிங்க, ஜப்பான் 'ஐசு' (Aizu) பல்கலைக்கழகத்தில் கணிணி விஞ்ஞானம் மற்றும் பொறியில் துறையில் முனைவர் பட்டப் படிப்பையும் நிறைவு செய்தார். இவர் ஜப்பான் சர்வதேச பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார் என அவரது லிங்க்ட்-இன் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.