Header Ads



தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு - இலங்கை அரசியல்வாதியின் காளைகளும் சீறிப்பாய தயார்


தைப்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராகி வருகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வளர்க்கும் காளைகளும் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்து வசதிகளோடு பராமரிக்கப்பட்டு அவற்றுக்கு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர் செந்தில் தொண்டமான். ஜல்லிக்கட்டு போட்டிகளில் செந்தில் தொண்டமானின் காளைகள் இறங்கினாலே எதிர்பார்ப்புகள் கூடும். இந்தக் காளைகள் ஒவ்வொன்றும் மாடுபிடி வீரர்களைக் களத்தில் நின்று மிரட்டுவதுடன், அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே திகழும்.


இந்த வீரமிகு காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்துப் பராமரித்து வருகிறார் செந்தில் தொண்டமான். திருப்பத்தூர் அருகே ஆளவிளாம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது தோப்பில் தமிழகம் மற்றும் வெளிமாநில காளைகளை வாங்கி பராமரித்து வருகிறார். இப்படி வளரும் இவரது காளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றுவரை நடைபெற்ற எல்லா ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பரிசுகளை குவித்து முதலாவது காளைகளாக திகழ்ந்து சிவகங்கை சீமையின் வீரத்தை பறைசாற்றி வருகின்றன. களத்தில் இக்காளைகளின் கொம்புகளையும், உடல் கம்பீரத்தையும் பார்த்ததும் வாலிபர்கள் பின்வாங்குவதுண்டு.


பேட்டகாளி, சோழன், அணில், கரிசல்,கரிகாலன், புல்லட் போன்ற செல்லப்பெயர்கள் அவர் வளர்க்கும் காளைகளுக்கு உள்ளன. கூரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பீரமாக வலம் வரும் இக்காளைகள் களத்தில் வீரர்களை மிரள வைக்கும் தனிச்சிறப்பு கொண்டவையாகும். பல போட்டிகளில் இக்காளைகள் முதல்பரிசான கார் போன்ற பல பரிசுகளை வென்று பெருமை சேர்த்துள்ளன.


இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளதால் உற்சாகத்துடன் தனது முகநூல் பக்கத்தில் 'ஜல்லிக்கட்டுக்கு காத்திருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார் செந்தில் தொண்டமான்.


ஜல்லிக்கட்டுக்காக பயிற்சி அளித்து வரும் செந்தில் தொண்டமான் காளைகள் எப்படி தயாராகின்றன என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். "பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக எனது தோட்டத்திலேயே வாடிவாசல் ஏற்பாடு செய்து தனிப்பயிற்சி வழங்கி வருவதோடு, காளைகளுக்கு உடல் வலிமைக்காக வழக்கமான உணவுகளை தவிர்த்து ஊட்டமளிக்கும் உணவுப் பொருட்களை வழங்குகின்றோம்" எனவும் அவர் கூறினார்.


(ONE INDIA TAMIL)

No comments

Powered by Blogger.