Header Ads



4 கோடி ரூபா பெறுமதியான 116 இரத்தினக் கற்களுடன், பஸ்ஸில் பயணித்த வர்த்தகருக்கு ஏற்பட்ட துயரம்


சுமார் 04 கோடி ரூபா பெறுமதியான 116 இரத்தினக் கற்கள் திருடப்பட்ட சம்பவமொன்று களுத்துறையில் பதிவாகியுள்ளது.


தெஹிவளை பிரதேசத்தில் மாணிக்கக் கல் வர்த்தகரொருவர் கொழும்பிலிருந்து தெய்யந்தர நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது அவரது பயணப் பையிலிருந்த பல பொதிகள் திருடப்பட்டுள்ளன. பொதியில் 116 இரத்தினக் கற்கள் இருந்ததை அறியாமல் சந்தேக நபர் பஸ்ஸுக்குள்ளேயே திருடப்பட்ட பொதியை வைத்து விட்டு பேருவளை பகுதியில் இறங்கியுள்ளார்.


அதன்படி பஸ் நடத்துனர் பொதியை எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளார். திருடப்பட்ட விவகாரம் வெளியாகிவிடுமென்ற அச்சத்தில் பஸ்ஸிலிருந்த பாதுகாப்பு கேமரா அமைப்பையும் அகற்றியுள்ளார்.


திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது பேருவளை நகரில் பஸ்ஸை நிறுத்திய போது, முதலில் இரத்தினக் கற்கள் அடங்கிய பொதியை திருடிய சந்தேகநபர் பீதியடைந்து பஸ்ஸை விட்டு இறங்கி அருகிலுள்ள வைத்திய நிலையத்துக்கு திருடப்பட்ட பொதியின்றி ஓடுவதை அவதானித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி, பஸ்ஸின் நடத்துனர் மீது விசாரணை அதிகாரிகள் சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர். சந்தேகநபரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில், மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியை கண்டுபிடித்து இரத்தினக் கற்களை மீட்டனர்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் 48 மற்றும் 36 வயதுடைய ஊறுபொக்க மற்றும் பயாகல பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.