Header Ads



வண்ணாத்தவில்லுவில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட விவகாரம் - இன்று நீதிமன்றத்தில் நடந்தவை


 - புத்தளத்திலிருந்து  இர்ஷாத் றஹ்மத்துல்லா -


புத்தளம் வண்ணாத்தவில்லு லெக்டோ தோட்டத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வழக்கு விசாரணை இன்றைய தினம் -15- செவ்வாய்க்கிழமை  புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இடம் பெற்றன.மேற்படி வழக்கில் முதலாம்,இரண்டாம் சந்தேக நபர்களுக்கு ஏற்கனவே மன்றினால் பிணை வழங்கப்பட்ட நிலையில் இன்று சாட்சி விசாரணைகள் இடம் பெற்றன.


இன்றைய சாட்சி விசாரணையின் போது முறைப்பாட்டாளர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரோவும்,சட்டத்தரணி பண்டாரவும்,பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மற்றும் கஸ்ஸாலி ஹூசைனும் ஆஜராகினர்.


இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது குற்றத்தடுப்பு பிரிவின் வணிக விசாரணை பிரிவின் முன்னாள் பொலீஸ் பரிசோதகர் டயஸ் தர்மரத்ன சாட்சியமளித்தார்.முதலில் அரச தரப்பு சட்டத்தரணிகளின் கேள்விகளுக்கு பதலளித்தார்.இதனையடுத்து முதலாம்,இரண்டாம் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் குறுக்கு விசாரணையினை முன் வைத்தார்.தமது கட்சிக்கார்கள் கைது செய்யப்பட்ட விதம் தொடர்பிலும்,விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட விதமானது கேள்விக்குள்ளாகும்  நிலையேற்பட்டுள்ளதாகவும் இதன் போது குறிப்பிட்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் ,சாட்சியமளிக்கும் அதிகாரி தொடர்பிலும் சில முறைப்பாடுகள் உள்ளதாகவும் இதன் போது நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.இது தொடர்பில் போதுமான ஆதாரங்களை உரிய காலத்தில் மன்றில் சமர்ப்பிப்பதாகவும் இதன் போது தெரிவித்தார்.


குறிப்பாக வண்ணாத்தவில்லு லெக்டோ தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் உரிய அதிகாரிகளால் பாரப்படுத்தப்படாமை தொடர்பில் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.இது கடமை மீறலாகும் என்றும் தமது வாதத்தின் போது சுட்டிக்காட்டினார்.


இதே வேளை இதன் போது குறுக்கிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாவனல்லை நீதமன்றில் இந்த பொருட்களை பாரமெடுத்தாக தெரிவிக்கப்படும் அதிகாரியினையும் சாட்சியாளர் பட்டியலில் 63 வதாக பெயரிடுமாறு வேண்டுகோளினை முன்வைத்தார்.இதற்கு நீதிபதிகள் அனுமதியளித்தனர்.


இந்த நிலையில் நீண்ட நேரம் மேற்படி சாட்சியாளரிடம் சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் குறுக்கு விசாரைணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நீதிமன்றின் நடவடிக்கைகள் மாலை 4.30 க்கும் இடை நிறுத்தப்பட்டது.


இதே வேளை நாளை புதன்கிழை இதனுடன் தொடர்புபட்டதாக குறிப்பிடப்பட்ட ஏனைய சந்தேக நபர்களினது , பிணை மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள் மன்றில் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.