Header Ads



அஹ்னாப் ஜாசிமுக்கு எதிராக எவ்வித தொழில்நுட்ப மற்றும் வழக்கு பொருட்களும் இல்லை - ஆச்சரியப்பட்ட நீதிபதி


- புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நவரச சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் அஹ்னாப் ஜாசிமின் வழக்கு விசாணைக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் திகதி குறிப்பிட்டுள்ளது.


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் அஹ்னாப் ஜாசிம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இது  தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் -16- புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொடவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


மேற்படி வழக்கின் முறைப்பாட்டளார் சார்பில் அரச சட்டத்தரணி நிமேகா த அல்விஸ் மன்றில் ஆஜரானார்.பிரதிவாதி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப்,மற்றும் ருஸ்னி ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.


இந்த நிலையில் பிரதிவாதியான அஹ்னாப் ஜாசிமும் மன்றில் ஆஜராகியிருந்தார்..


இந்த நிலையில் இந்த வழக்கின் வாதங்களை ஆரம்பிப்பது தொடர்பிலான முன்னேற்பாடு தொடர்பில் அரச சட்டத்தரணி தமது கருத்துக்களை மன்றில் முன் வைத்த போது ,மேற்படி பிரதிவாதிக்கு  எதிரான எவ்வித தொழில் நுட்ப மற்றும் வழக்கு பொருட்களே இல்லை என்றும்,ஆனால் இவருக்கு எதிரான சாட்சிகள் இருப்பதாகவும் அவர்களை மன்றில் ஆஜர்படுத்த  வழக்கு தினத்தில் கொண்டுர அனுமதியினை கோறினார்.


இது தொடர்பில் மேல் நீதிமன்ற நிதிபதி நதி அபர்ணா சுவந்தருகொட,மேற்படி பிரதிவாதிக்கு எதிரான எவ்வித நீதிமன்ற வழக்கு பொருட்கள் இல்லையா என்று மீண்டும் ஆச்சரியத்துடன் அரச சட்டத்தரணியிடம் கேள்வியெழுப்பினார்.


இவருக்கு எதிரான எவ்வித ஆவணங்களும்,பொருட்களும் இல்லை என்ற பதிலை அரச சட்டத்தரணி கூறினார்.இந்த நிலையில் இந்த விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்று தெரிவித்து,அரச சட்டத்தரணி முன்வைத்த சாட்சிகள் தொடர்பில் வழக்கினை முன்னெடுப்பது தொடர்பில் அரச சட்டத்தரணி மற்றும் பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் ஆகியோரிடத்தில் பொருத்தமான திகதியொன்றினை அறிவிக்குமாறு திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.


இதே வேளை சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் மன்றில் தெரிவிக்கையில்,அஹ்னாப் தொடர்பில் ஏற்கனவே உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீதான வழக்கு  உள்ள நிலையில் அங்கு போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,அதில் தேவாயன ஆவணங்கள் வழக்கு விசாரணையின் போது மன்றில் சமர்ப்பிக்க முடியும் என்று கூறியதுடன்,நவரசம் சஞ்சிகையின் மொழி பெயர்ப்பும் அதில் உள்ளதாகவும் கூறினார்.


இரு தரப்பு கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட மேல் நீதமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட எதிர்வரும்  ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி விரிவான வழக்கு விசாரணைக்கான திகதியினை அறிவித்தார்.


அன்றைய தினம் சாட்சிகளிடத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதன் போது பிரதி வாதியின் சட்டத்தரணிக்கும் சாட்சிகளை குறுக்கு விசாரணைக்குட்படுத்த முடியும் என்றும் நீதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.


இந்த நிலையில் தாமும் சில சாட்சிகளை வழக்கு தினங்களில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் இதன் போது  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


 அஹ்னாப் ஜெசீமின் கைதுக்கு எதிராக சர்வதேச நாடுகள்,மற்றும் அனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கடுமையான கண்டனத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.