Header Ads



தேவையுடையோருக்கு முக்கியமளித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் கூறிய விடயத்தை உயிர்பிப்போம்


இன்று  பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு வசதிபடைத்தவர்கள் உதவி புரிய வேண்டும், துன்பத்தில் இருப்போருக்கு உதவி புரியும்படி நபியவர்கள் வலியுறுத்தியிக்கின்றனர். நாம் அவரின் கூற்றை உயிர்பிப்போம் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உதவித் தவிசாளருமான எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார்.


தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்திருக்கும் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 


இன்று  நாடு பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் நாட்டு மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருக்கின்றனர். வறுமைகோட்டுக்கு கீழ் வாழும் மக்களும் நடுத்தர வருமானம் பெறுவோரும் பெரும் கஷ்டத்தை எதிர்க்கொள்கின்றனர். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் உதவி தேவைப்படுகின்றது. எனவே, இந்த மீலாத் தினத்தில் அவர்களுக்கு உதவி செய்யும் விடயத்தில் முன்னுரிமையளிப்பது சிறந்ததாக அமையும். 


நன்மையான காரியங்களுக்கு ஒருவருக்கொருவர் உதவிடுவது இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக உள்ளது. துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறி, அவரின் துன்பத்தை அகற்றுவது நன்மை தரும் காரியம். 


‘யார் இந்த உலகில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ, அவருடைய மறுஉலகத் துன்பங்களில் ஒன்றை இறைவன் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்ய முன்வருகிறாரோ அவருக்கு இறைவன் இரு உலகிலும் உதவி செய்கிறான். யார் ஒரு இறைநம்பிக்கையாளரின் குறைகளை மறைக் கிறாரோ அவரின் குறைகளை இறைவன் இரு உலகிலும் மறைக்கிறான். ‘ஒருவன் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அந்த அடியானுக்கு இறைவன் உதவி செய்து கொண்டிருக்கிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)


‘எவர் தமது சகோதரனுடைய தேவையை நிறைவேற்றுகிறாரோ, அவருடைய தேவையை இறைவன் நிறைவேற்றி வைப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூத்)


ஆகவே, இந்த இக்கட்டான தருனத்தில் தேவையுடையோருக்கு உதவி செய்வதற்கு முக்கியமளித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் கூறிய விடயத்தை உயிர்பிப்போம் என இந்த மீலாத் தின செய்தியில் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.