கடல் வழியாக நியுஸிலாந்துக்கு அனுப்புவதாக பண மோசடி - பெண் கைது
வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(9) விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த சந்தேக நபரான பெண் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு மோசடி செய்து ஏமாற்றிய இலட்சக்கணக்கான பணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பெருந்தொகை பணத்தை சந்தேக நபருக்கு வழங்கிவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து முறைப்பாடு அளிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
சந்தேக நபரின் ஏமாற்றி மோசடி செய்த பணத்தை எங்கு அனுப்புகின்றார் என்ன நடந்தது என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளில் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை இது தொடர்பாக சந்திவெளி ஏறாவூர் கல்முனை உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக கல்முனை தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த 29 வயதான திருமணமானவர் என்பதுடன் வங்கி கணக்கின் ஊடாக சுமார் 8 இலட்சம் என தலா ஒருவர் வீதம் அறவிட்டுள்ளதுடன் கடல் வழியாக நியுஸிலாந்து நாட்டிற்கு அனுப்புவதாக கூறியே இம்மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையில் மேலதிக பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment