"நெருப்பிலே போட்டாலும் ராஜபக்சக்கள் மீண்டெழுவார்கள்
"நெருப்பிலே போட்டாலும் மீண்டெழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ராஜபக்சக்களும் மீண்டெழுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரிமான்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரால் சூளுரைக்கப்பட்டுள்ளது.
”ஒன்றாக எழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்”எனும் தொனிப்பொருளின் கீழ் களுத்துறையில் உள்ள ரோஹித்த அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்தில் நேற்று பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போதே இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மகிந்த ராஜபக்ச தலைமையில் மொட்டுக் கட்சி ஆட்சி தொடரும். தேவையான நேரங்களில் உரிய அஸ்திரங்கள் பயன்படுத்தப்படும்" என்றும் இக் கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மொட்டுக் கட்சி ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாவதற்கு விமல், கம்மன்பில, டலஸ் போன்ற உள்ளகச் சதிகாரர்களும் பிரதான பங்கை வகித்தனர் என விமர்சனக்கணைகள் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், இரசாயன உரப் பாவனைக்கு தடை விதிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவும் பின்னடைவுக்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மே 9 மக்களின் தாக்குதல்கள், வீடெரிப்பு சம்பவத்துக்குப் பிறகு மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் பொதுவெளியில் ஒரே மேடையில் சங்கமித்தது இதுவே முதன்முறையாகும்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ச, பவித்ராதேவி வன்னிஆரச்சி, சாகர காரியவசம், சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்ட மொட்டுக் கட்சி எம்.பிக்கள் நிகழ்வில் உரையாற்றினர்.
இதில் குறிப்பாக ரோஹித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம் ஆகியோர், விமல், கம்மன்பில உள்ளிட்டோரைக் கடுமையாக சாடியுள்ளனர்.
அத்துடன், இரசாயன உரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்திருந்த முடிவை பவித்ராதேவி வன்னிஆரச்சி விமர்சித்துள்ளார்.
“இனி யார் ஜனாதிபதியானாலும், தம்மையும், கட்சியையும் வழிநடத்த மகிந்த ராஜபக்ச அவசியம்” எனவும் பவித்ராதேவி கேட்டுக்கொண்டார்.
மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறை ஜனாதிபதி ஆகியிருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும், சுயவிமர்சனத்துடன், தவறுகளைத் திருத்திக்கொண்டு பீனிக்ஸ் பறவைபோல் மொட்டுக் கட்சியும், ராஜபக்சக்களும் மீண்டெழுவார்கள் என எதிரிமான்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் இக்கூட்டத்தில் சூளுரைத்துள்ளனர்.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவின் காலை வாரவில்லை எனவும், மகிந்த பதவி விலகியதால்தான் கோட்டாபயவும் வீடு செல்ல நேரிட்டது எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
Let's try once, why not put them into the fire & check.
ReplyDelete