Header Adsஇந்திய இருமல் மருந்தால், இறந்த 66 குழந்தைகள்: நீதி கேட்கும் காம்பியா தாய்மார்கள்


மரியம் குயதேவின் வீட்டில் உள்ள ஒரு சிவப்பு நிற மோட்டர்பைக் பொம்மை மீது தூசி படிந்துள்ளது. அது அவருடைய 20 மாதமான மகன் முசாவுக்காக அவர் வைத்திருந்தார். ஆனால், முசா செப்டம்பர் மாதம் உயிரிழந்துவிட்டான்.


காம்பியாவில் இருமல் மருந்து குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 66 குழந்தைகளில் அவரும் ஒருவர். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த இருமல் மருந்துகள் காரணமாக சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.


மரியத்தின் குடும்பத்தினர் யாரும் அந்த பொம்மையைத் தொடுவதில்லை. அது அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பை நினைவுப்படுத்துகிறது. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர், தமது மகனுக்கு என்ன நடந்தது என்று நினைக்கும் போது அழுகிறார்.


காம்பியாவின் மிகப்பெரிய நகரமான செரிகுந்தாவின் புறபுநகர் பகுதியில் உள்ளது அவரது வீடு. அவரது மகனுக்கு முதலில் சளி, காய்ச்சல் ஏற்பட்டது. மருந்துவரிடம் அழைத்து சென்ற பின்னர், மகனை குணப்படுத்த அவரது கணவர் ஒரு மருந்தை வாங்கினார்.


"நான் அவனுக்கு மருந்து கொடுத்தப்போது, காய்ச்சல் நின்று விட்டது. ஆனால், மற்றோரு பிரச்னை தொடங்கியது," என்று குயதே கூறினார்.


"என் மகன் சிறுநீர் கழிக்கவில்லை."


அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று, முசாவுக்கு ரத்தப் பரிசோதனைக்கு செய்தபோது, மலேரியா இல்லை என்று தெரிந்தது. அவனுக்கு வேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. அது பலனளிக்கவில்லை. பின்னர் சிறுநீர் வடிகுழாய் பொருத்தப்பட்டது. ஆனால் அவன் சிறுநீர் கழிக்கவில்லை.


இறுதியாக, அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.


"அவன் உடல்நிலை சரியாகவில்லை. அவன் இறந்துவிட்டான்."


காம்பியாவில் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக, நான்கு இருமல் மருந்துகள் பற்றி உலக சுகாதார அமைப்பு உலகளாவிய எச்சரிக்கை விடுத்தது.


இருமல் மருந்து குடித்து உயிரிழந்த 66 குழந்தைகளில் முசாவும் ஒருவர்


மெய்டன் ஃப்ரமாசிடிகல் என்ற இந்திய நிறுவனம் தயாரித்த நான்கு மருந்துகள் - ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன்(Promethazine Oral Solution) , கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் (Magrip N Cold Syrup) - அதன் பாதுகாப்பு தன்மை பற்றி உத்தரவாதம் அளிக்க தவறிவிட்டது என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.


இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்குமற்று கேட்ட பிபிசி கோரிக்கைக்கு இதுவரை அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை.


இந்த சம்பவம் தொடர்பாக காம்பியா மக்கள் மிகவும் கோபமாக இருக்கின்றனர்.


காம்பியா சுகாதார அமைச்சர் டாக்டர் அஹ்மது லாமின் சமதே ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மேலும், அந்த நாட்டிற்கு இந்த மருந்துகளை இறக்குமதி செய்தவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரி வருகின்றனர்.


"அறுபத்தி ஆறு பேர் உயிரிழந்திருப்பது என்பது மிகவும் பெரிய அளவிலான எண்ணிக்கை. ஆகவே எங்களுக்கு நீதி வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி குழந்தைகள்," என்று குயதே கூறினார்.


மரியம் சிசாவோ தமது மகளை தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பு, அவரது ஊரில் உள்ள மருந்துவமனைக்கு மூன்று முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.


மரியம் சிசாவோ தமது மகளை தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பு, அவரது ஊரில் உள்ள மருந்துவமனைக்கு மூன்று முறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.


இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றொரு குழந்தை, ஐந்து மாத குழந்தையான ஆயிஷா. இருமல் மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு, தமது மகள் சிறுநீர் கழிக்கவில்லை என்று அவரது தாய் மரியம் சிசாவோ உணர்ந்தார்.


முதலில் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது மகளின் சிறுநீர்ப்பையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து, இரண்டு நாட்களும் அவளை மருந்துவமனைக்கு அழைத்து சென்றார். பிறகு, பிரிகாமாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள தலைநகர் பன்ஜுலில் உள்ள மருத்துவமனைக்கு ஆயிஷாவை அழைத்து சென்றார்.


ஆனால் அங்கு ஐந்து நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆயிஷா உயிரிழந்தாள்.


"எனது மகள் மிகவும் வலி அனுபவித்து உயிரிழந்தாள். ஒரு முறை மருந்துவர்கள் அவளுக்கு டிரிப்ஸ் ஏற்ற முயற்சி செய்த போது, அவளது கையில் நரம்புகளையே பார்க்க முடியவில்லை. அந்த மருந்துவமனையில் நானும் அதே வார்டில் உள்ள இரண்டு பெண்களின் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் அனைவரும் எங்கள் குழந்தைகளை இழந்தோம்," என்கிறார்.


"எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆயிஷா ஒரே மகள். ஆயிஷாவைப் பெற்றதில் என் கணவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவளுடைய மரணத்தை அவரால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை," என்கிறார்.


காம்பியாவில் தற்போது மருந்துகள் பாதுகாப்பானதா என்று சோதிக்கும் திறன் கொண்ட ஆய்வகம் இல்லை. அதனால், அவை வெளிநாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று காம்பியாவின் சுகாதார சேவை இயக்குநர் முஸ்தபா பிட்டாய் பிபிசியின் ஃபோகஸ் ஆன் ஆப்ரிக்கா நிகழ்ச்சியில் கூறினார்.


ஆனால் காம்பியா அரசு இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சிசாவோ கருதுகிறார்.


"இது பெற்றோருக்கு ஒரு பாடம். ஆனால் அரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. எந்தவொரு மருந்தும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவை மனிதர்கள் எடுத்துகொள்ள ஏற்றதா இல்லையா என்பதை சரியாக சரிபார்க்க வேண்டும்," என்று அவர் கூறினார்.


அலியு கிஜேரா தமது மகன் முகமதுவை சிகிச்சைக்காக அண்டை நாடான செனகலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.


அலியு கிஜேரா தமது மகன் முகமதுவை சிகிச்சைக்காக அண்டை நாடான செனகலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.


இசடோ சாம் தமது இரண்டரை வயதான மகன் முகமதுவின் மரணத்தைப் பற்றி பேச முடியாத அளவுக்கு மிகவும் வேதனையில் இருக்கிறார்.


அவர் தமது மற்ற இரண்டு குழந்தைகளுடன் அழுதுகொண்டே செர்ரெகுண்டாவில் உள்ள அவர்களது வீட்டு கூடத்தை விட்டு வெளியேறினார்.


முகமதுவின் தந்தை அலியு கிஜேரா தமது மகனுக்கு என்ன நடந்தது என்பதை விளக்கினார்.


தமது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிறுநீர் கழிக்க முடியாமல் இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அவர் கூறினார். ஆனால் மருத்துவர்கள் முகமதுவுக்கு மலேரியாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் அவரது மகனின் உடல்நிலை மோசமடைந்தது.


மருத்துவர்கள் அவரது மகனுக்கு அண்டை நாடான செனகலில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர். காம்பியாவை விட அங்கு மருத்துவ சேவை சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் அவரது மகனின் உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், அது அவரைக் காப்பாற்றவில்லை.


தமது நாட்டில் போதுமான சுகாதார வசதி இல்லை என்று கிஜேரா கோபமடைந்தார். இதற்காக, அவர் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


மருத்துவ உபகரணங்களும் சரியான மருந்தும் இருந்திருந்தால் அவரது மகனையும் இன்னும் பல குழந்தைகளையும் காப்பாற்றியிருக்கலாம் என்கிறார் அவர்.

No comments

Powered by Blogger.