Header Ads



UNP னரை குழிதோண்டிப் புதைத்த குற்றவாளிகளுக்கு, ரணில் அமைச்சுப் பதவிகளை வழங்கி வருகிறார் - சஜித்


சௌபாக்கியம் மிக்க தேசமொன்றை உருவாக்குவோம் என தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்த அரசாங்கம்,போஷாக்குக் குறைபாடுகள் நிறைந்த நாட்டைக் கையகப்படுத்தியுள்ளதாகவும், போசாக்கின்மையால் நாடு தவிக்கும் வேளையில்,அரசாங்கம் மிகை ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


அப்போது அநீதி இழைக்கப்பட்ட அனைவருக்கும் தனது கடமைகளை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என தற்போதைய ஜனாதிபதி அப்போது கூறியிருந்த போதும், ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களை குழிதோண்டிப் புதைத்த குற்றவாளிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி இன்று கடமையை நிறைவேற்றி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு மகிந்த ராஜபக்சவிடம் சென்று தத்தமது துக்கங்களைக் கூறி தலைவணங்க நேரிட்டுள்ளதாக தெரிவித்தஎதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய ஜனாதிபதியின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள தலைவிதி வருந்தத்தக்கது எனவும், தவறாக வழிநடத்தப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் எதிர்காலத்தில் நெலும் மாவத்தையிலுள்ள காக்கையிடமிருந்தே வேட்புமனுக்களைப் பெற வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


தற்போது ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினாலும் அரசாங்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மீண்டும் உதவி வழங்க மாட்டோம் என இந்தியா கூறியுள்ளதாகவும், நாட்டின் மனித உரிமைகள் உள்ளடங்களாக ஜனநாயகம் பாதுகாக்கப்படும் வரை எவ்வித உதவியும் வழங்கப் போவதில்லை என சர்வதேச அமைப்புகள் கூட தெரிவித்துள்ளன எனவும் குறிப்பிட்டார்.


முழு நாடும் கடும் நெருக்கடியிலிருக்கும் போது அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சக நிகழ்வுகளின் போது வாணவேடிக்கைகளை நடத்தி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தே அவர்கள் அந்தப் பதவிகளைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.


மனிதாபிமான முதலாளித்துவத்தின் ஊடாக இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தம்மை அர்ப்பணிக்கும் எனவும் தெரிவித்தார்.


இன்று (18) கம்பஹா மாவட்ட அத்தனகல்ல ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.