Header Ads



வீரவன்சவின் தலைமையில் 'மேலவை இலங்கை கூட்டணி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி உருவாக்கம்


அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயாதீன கட்சிகள் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (04) மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் நடைபெற்ற முதலாவது பொது மாநாட்டில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.


இதன்போது புதிய கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் என்பனவும் இன்று பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது தமது கூட்டணியின் பெயரை “மேலவை இலங்கை கூட்டணி” என பகிரங்கப்படுத்தியுள்ளனர்.


இதன்போது "மேலவைஇலங்கை கூட்டணி"யின் செயற்குழு அறிவிக்கப்பட்டதுடன், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச மேலவை இலங்கை கூட்டணியின் தலைவராகவும், செயலாளராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி. வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மேலவை இலங்கை கூட்டணியின் தேசிய அமைப்பாளராக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் மேலவை இலங்கை கூட்டணி"யின் பிரதித் தலைவர்களாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினரும், யுதுகம தேசிய அமைப்பின் தவிசாளருமான கெவிந்து குமாரதுங்க பிரதி செயலாளராகவும் அறிவிக்கப்பட்டார்.


மேலும், சுயாதீன கட்சிகள் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அதில் தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர, அக்கட்சியின் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸம்மில், ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவர் வீரசுமண வீரசிங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.


மாநாட்டுக்கு வருகை தந்தவர்களை பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க வரவேற்று உரையாற்றிய பின்னர் சுயாதீன கட்சி ஒன்றியத்தின் தலைவர்கள் கொள்கை பிரகடனத்தில் கையொப்பமிட்டனர்.

No comments

Powered by Blogger.