Header Ads



லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டலாக மாற்றவோ, விற்பனை செய்யவோ எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை


லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டலாக மாற்றவோ விற்பனை செய்யவோ அரசாங்கம்  எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என தகவல் ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.இது தொடர்பில் சிலவார இறுதிப் பத்திரிகைகளிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியான செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டலாக மாற்றுவதற்கோ விற்பனை செய்வதற்கோ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் நேற்று கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் பத்திரிகையின் தாய்வீடான லேக் ஹவுஸ் தொடர்பில் இவ்வாறான முடிவு எடுப்பது எவ்வாறாக இருந்தாலும் அது தொடர்பில் ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது அரசாங்கமோ எந்தவித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணியையும் கட்டிடத்தையும் முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு ஊடக அமைச்சிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. லேக் ஹவுஸ் நிறுவனத்தை விற்பனை செய்யவும் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் கொழும்பு நகரில் வேறு இடத்தில் லேக்ஹவுஸ் நிறுவனத்தை ஆரம்பிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இந்த காணிகளை வழங்குவதற்கான யோசனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்ததே.

(ஷம்ஸ் பாஹிம்)

No comments

Powered by Blogger.