Header Ads

இந்தியா வழங்கிய விமானத்தை, இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருப்பது பொதுவான குணாம்சங்கள் என்றும் இரு தரப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எனவே இரு நாடுகளுக்கும் தனியான பயணம் இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


வரலாறு இந்தியாவையும் இலங்கையையும் ஒன்று சேர்த்திருப்பதால் எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க அவர்கள், பிராந்தியம் மற்றும் உலக நாடுகளின் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கு  நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டோனியர் 228  முதலாவது கடல்சார் ரோந்து விமானத்தை இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று (15) காலை நடைபெற்றபோதே  ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். 


விமானப்படைத் தள வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதி அவர்களை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனகே வரவேற்றார். அதன்பின்னர், ஜனாதிபதி அவர்களுக்கு விசேட இராணுவ மரியாதையை வழங்கப்பட்டது.


இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய நாடான இலங்கை, உலக வல்லரசாக முன்னேறி வருகின்ற இந்தியாவின் வகிபாகத்தை அவதானித்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படும் திறன் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 வருட நிறைவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


இந்திய-இலங்கை உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம் எனவும், அவற்றைத்  தீர்ப்பதற்கு துரிதமாக நாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.


இராமாயணத்தைப் பொறுத்தவரை, அது இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருப்பதோடு  ஒரு சில சிறிய வேறுபாடுகள் மாத்திரமே உள்ளன. இந்தியா, இராமனை மாவீரனாகக் கருதுவதாகவும் இலங்கை இராமன், இராவணன் இருவரையும் மாவீரர்களாகக் கருதுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


2018 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி, புதுடில்லியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் போது, இலங்கையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து இரண்டு டோனியர் ரக கடல்சார் கண்காணிப்பு விமானங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.


பின்னர், இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்றை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது. புதிய விமானம் தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதே இதற்குக் காரணம் ஆகும். இந்த முதல் இரண்டு ஆண்டுகளின் முடிவில், புதிய டோனியர் 228 கடல்சார் ரோந்து விமானத்தை இலவசமாக வழங்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்ததுடன், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு மற்றொரு புதிய விமானத்தை இந்தியா வழங்க உள்ளது.


இதனைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனகே ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கினார்.


இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனகே, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இராணுவ தளபதி லுதினன் ஜெனரல் விகும் லியனகே உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-15No comments

Powered by Blogger.