Header Ads



எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நினைவாக ஒரு தோப்பை உருவாக்குங்கள், இந்த சமூகம் மறந்துவிடாமல் இருக்க உயிரோட்டம் அவசியம்


கொவிட் பெரும் தொற்றைக் காரணம் காட்டி, வேண்டுமென்றே கொடூரமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் நீங்காத நினைவுகள் எதிர்கால சந்ததியினரின் மனங்களிலும் ஆழப்பதிந்திருப்பதற்காக ஒரு தோப்பை உருவாக்கி , அதில் எரியூட்டப்பட்ட முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் பெயரில் தனித்தனி மரங்கள் நடப்படவேண்டும் என ஸ்ரீலங்கா   காங்கிரஸ் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உருக்கமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.


கொழும்பு, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் வார இறுதியில்  நடைபெற்ற கலாபூஷணம் ஸக்கியா சித்திக் பரீட் எழுதிய "நமது வரலாற்று ஆளுமைகள்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக்  குறிப்பிட்டார்.


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,


இந் நிகழ்வில் எனக்கு முன்னர் உரையாற்றிச் சென்ற கலாநிதி றவூப் ஸெய்ன்  குறிப்பிட்ட " வரலாற்று ரீதியான பிரக்ஞை இருக்கவேண்டும் " என்ற மேற்கோள் வாக்கியம்  எல்லா சமூகத்தினருக்கும் முக்கியமானதாகும்.  இந்த பிரக்ஞையின்  உண்மையான ஒரு பரிமாணம்தான்  முஸ்லிம் சமூகத்திற்காக பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பற்றிய தடயங்களின் பதிவாகும். 


ஒரு சமூகம் அவ்வப்போது படுகின்ற அவஸ்தைகள், அவற்றையும் தாண்டி வருகின்ற சவால்கள், அந்த சவால்களை உலகமயப்படுத்துவது, அதனை எவ்வாறு நினைவிலிருந்து அகலாமல் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற விவகாரமும் ஒரு சமூக வரலாற்றின் பதிவுகளைப் பற்றிய விடயத்தின் மிக முக்கியமான அம்சமாகும்.  அதனை  Memorialization என்று ஆங்கிலத்தில்  சொல்வார்கள்.அதற்கென்றே ஒரு துறை இருக்கிறது.


உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால்,

அதிகமாக சவாலுக்கு உட்படுத்தப்படுகின்ற ஒரு விடயம்தான் யூதர்களுக்கு எதிரான இன ஒழிப்பு என்ற விடயமாகும். இதனை " நாசகார இன ஒழிப்பு"(Holocaust ) என்று சொல்வார்கள்.

அதை  நினைவிலிருந்து நீங்காது வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்கு யூதர்கள்  எப்படியெல்லாம் பிரயாசைப் படுகிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம்.


அது நிறைய சவாலுக்கு உட்படுத்தப்படுகிற விடயம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த யூத சமூகம் அதில் எவ்வளவு அக்கறை காட்டுகின்றது என்பதைப் பார்க்கின்ற போது , முஸ்லிம் சமூகம் இவ்வாறான விவகாரங்களை எவ்வளவு தூரம் நினைவில் பதித்தல்(Memorialization) என்ற இந்த விவகாரத்தில் கரிசனை காட்டுகிறார்கள் என்ற விடயத்தையும் நான் இங்கு ஞாபகப்படுத்தலாம் என்று விரும்புகிறேன்.


குறிப்பாக கடந்த நான்கு,ஐந்து வருடங்களாக , இந்த நாட்டில் ஓர் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றியடைந்துவிட்டது என்ற வெற்றிக்களிப்பிலும் , மமதையிலும்  இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் "ஓர் எதிரியை அழித்துவிட்டோம்; இன்னுமோர் எதிரியை வரித்துக் கொள்ளவேண்டும்" அல்லது "வலிந்துவரவழைக்கவேண்டும்" என்ற நோக்கில் நடந்தேறிய அநியாயங்கள் என்பன இந்த சமூகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான பதிவாக Memorisation என்கிற விதத்தில் மிக முக்கியமாக இடம்பெற வேண்டிய விடயங்களாகும்.


உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.,

நிறைய விடயங்கள் நடந்து முடிந்துவிட்டன. ஆனால் இந்த முஸ்லிம்களை புண்படுத்திய மிக மோசமான நிகழ்வுதான் இந்த கொடிய கொரோனா தொற்றின் காரணமாக மரணித்த ஜனாஸாக்களை தராமல் அவற்றைக்  கொண்டுபோய் பலவந்தமாக எரித்த விவகாரமாகும்.


இந்த நாட்டில் இருக்கும் சகல இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களும்,உயர் ஸ்தானியர்களும் ஒன்றுகூடி "இந்த அநியாயத்தை  நிறுத்துங்கள்"என்று  கூட்டாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதினார்கள். அந்தக் கடிதத்திற்கு ஒரு பதில் கூட கொடுக்காமல்  அதை குப்பைத் தொட்டியில் போட்ட ஒருவராகத்தான் இன்று இவ்வளவு இழிவுக்குள்ளாகியிருக்கின்ற இந்த நாட்டின் முன்னைய ஜனாதிபதி நடந்து கொண்டார் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இதற்குச் சொ காரணங்கள் நான் ஒரு முறை அன்று நான் அமைச்சராகவிருந்த பின்னர் என்னை அழைத்த ஒரு நிகழ்ச்சியிலும் இதனை குறிப்பிட்டிருந்தேன்.


எவ்வாறு இந்த அநியாயங்கள் நடந்தன? அவற்றின் பின்னணி என்ன?, இன்னும் அநியாயங்கள் முற்றுப்பெறவில்லை. இந்த திங்கட்கிழமையும், புத்தளம் மேல் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிரான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது எவ்வளவு சோடிக்கப்பட்ட விவகாரம் என்பது அந்த விடயத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்குப் புரியும். 


ஆனால், அதற்கு மத்தியில் இப்போது பெரிய பட்டியல் அடங்கிய ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருக்கிறார்கள். பலரது பெயர் பட்டியல் அதில் உள்ளது. அதுமாத்திரமல்ல புத்தகங்களை எழுதுபவர்கள் நல்ல காரியத்திற்காகவும் எழுதலாம், சில நேரம் சில ஊடகவியலாளர்களுடைய பங்களிப்பு என்று பார்க்கிறபோது கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மன உணர்வுகளைப் பாதித்த சல்மான் ருஷ்டியுடைய மூர்க்கத்தனமான விளக்கங்களைக் குறித்து கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசப்படுகின்ற பொழுது கருத்து வெளியீட்டு சுதந்திரமிருப்பதானால் வன்செயலுக்கு எதிராகக கண்டிக்கப்படுவதற்குமான சுதந்திரமும் இருக்கவேண்டும் என்ற சல்மான் ருஷ்டிடைய  கூற்றை மறுதலித்து  சிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரான அமீன் இஸ்ஸத்தீன்  ஓர் ஆங்கில நாளிதழில் இன்று(20) கட்டுரையொன்றை  எழுதியிருந்தார். ஆகவே மக்களின் மன உணர்வுகளை மதிக்காதவர்களைக்  கண்டிக்கவேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் இருக்கிறது.ஊடகவியலாளர்கள் துணிகரமாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கும் அதைவிடத்  துணிகரம் வேண்டும்.


ஒரு கட்டத்தில் இந்த நாட்டில் முஸ்லிம் அமைச்சர்,ஆளுநர் பதவி விலகவேண்டும் என்ற தேவையற்ற பாரிய புரளியைக் கிளப்பி அதற்காகப்போய் கண்டியில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தது ஒரு கூட்டம். இங்கு நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை.அதை அடிப்படையாகவைத்து நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு பெரிய முஸ்தீபு நடந்தது.  எல்லா இடங்களிலும் தடியுடன் குண்டர்களும்,இனவாதிகளும் இரவோடிரவாக  பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டார்கள்.


மிகப் பயங்கரமான சூழ்நிலை தோன்றியது நாங்கள் அரசாங்கத்தினர்  மீது அழுத்தம் செலுத்தியபோது அவர்கள்,  "பாதுகாப்பு தரப்பிடம் சொல்லியிருக்கிறோம் .ஒன்றும் நடக்காது " என்று வெறும் உத்தரவாதம் ஒன்றைத் தந்தார்கள். ஆனால், உத்தரவாதத்தினால் ஒன்றும் நடக்காது என்பதால் நள்ளிரவிற்குப் பிறகு  என்ன நடக்கிறது என்று நேரடியாக அவதானித்த எங்களுக்கு வேறுவழியிருக்கவில்லை. பிரதமரிடம் சென்றோம். ஜனாதிபதியிடம் சென்றோம் அடுத்த நாள் இந்த விடயம் பூதாகரமான கலவரமாக வெடிக்கப்போகின்றது என்ற நிலைவரம்  நிலவியது. வர்த்தகப் பிரமுகர்கள், ஜம்இய்யத்துல் உலமா முக்கியஸ்தர்கள் எல்லோரும் கூடி , பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களைச் சந்தித்துப் பேசினார்கள்.


 "நீங்கள் இதற்கு தலைமைதாங்கி எல்லா உறுப்பினர்களுடனும் பேசுங்கள் "என்று என்னிடம் சொன்னார்கள்.

நேரடியாக நாங்கள் பிரதமரிடம் சென்று  "இதை உடனடியாக நிறுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுங்கள் " என்று சொன்னோம் ,நிறுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.  "தாக்குதல் நடக்கப்போகிறது. அநியாயமாக ஏதோ காரணங்களுக்காக அந்த அரசியல்வாதிகள் இருவரும் இராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்கின்ற விவகாரம் பிழையானது  என்பதை புரிந்து கொள்ளுங்கள் "என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னோம். அதற்கும் சாக்குப்போக்காக "இல்லை, நீங்கள் பொறுமையாக இருங்கள் நாங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்றோம்  என்றார்கள்.


ஆனால், நாங்கள் பொறுமையிழந்து போனோம், எல்லோரையும் அழைத்து ஒரேடியாக அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இராஜனாமா செய்தோம். ஆனால்  அதையும் ஒரு மூலதனமாக வைத்து அடுத்த தேர்தலில் ,"இப்படிதான் இந்த முஸ்லிம்கள்.முஸ்லிம் தலைவர்கள் என்றால் பிழைசெய்த முஸ்லிம் தலைவர்களை பாதுகாப்பதற்கு எல்லோரும் சேர்ந்து கூட்டாக இராஜினாமா செய்தார்கள் பார்தீர்களா?'" என்று இப்படியெல்லாம் பிரசாரம் செய்துதான் "அதிக பெரும்பான்மையோடு ஆட்சியமைத்தோம் " என்று சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு நேர்ந்த கதியைப்பார்த்தால் , "நான் சதிகாரர்களை மிகைத்த சதிகாரன்" " என்று இறைவன் அல்- குர்ஆனில் கூறுவதில் எவ்வளவு அர்த்தம்  பொதிந்துள்ளது என்பதை நாங்கள் இன்று உணர்கிறோம்.


இவையெல்லாம் வரலாற்றில் பதியப்படவேண்டிய விடயங்களாகும். இப்படியெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தினரில் ஒரு கணிசமான சாரார்,கடந்த யுத்தத்திற்குப் பிறகு  முஸ்லிம்கள் மீது நடத்திய பாய்ச்சலின் பயங்கரம் என்பது வெவ்வேறு கட்டங்களைக் கொண்டிருந்தது.


 எனவேதான் ,அண்மையில் இது சம்பந்தமாக புதிய ஜனாதிபதிக்கு ஒர் ஆவணத்தைக் கொடுத்தபோது இப்போது அதிலும் பிழை பிடிக்கிறார்கள்.


அதைவைத்து எங்களைத் தீவிரவாதிகளாக சித்திரிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. நான் சொன்ன விடயத்தைச் சரியாகப் பார்க்காமல், உண்மையாக விடயத்தை ஆராயாமல் எடுத்தஎடுப்பிலேயே அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு மதக்குழுவினருக்கு அல்லது ஒரு சமூகத்தை நோக்கி ஒரு பிழையான பிரசாரம் முஸ்லிம் தலைமைகள் சம்பந்தமாக செய்யப்படுவது என்பது கவலைக்குரிய விடயம் மாத்திரமல்ல ,கண்டனத்திற்குரிய விடயமுமாகும்.


இந் நாட்டின் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாது  , நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கக்ககூடிய விதத்திலேயே அண்மையில் நாங்கள்  ஜனாதிபதியை சந்தித்தபோது ஒரு ஆவணத்தை அவரிடம் கையளித்திருந்தோம்.  அதில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவமின்றி அங்கு  தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பது தொடர்பாக அதிகாரமுள்ள ஒரு செயலணியை அமைத்து,   அகழ்வாராய்ச்சி தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுவது பற்றியஎமது கவலையை நாங்கள் வெளியிட்டிருந்தோம், அதன் மூலமாக சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்குள்ள சட்ட  அதிகாரங்களைப் பயன்படுத்தி அநீதி இழைக்கப்படக்கூடிய நிலைமை இருப்பதனால் பொதுவாக நீதியான முறையில் அதனை முன்னெடுக்குமாறு நாங்கள் கேட்டிருந்தோம், அதற்கும்  மதிக்கத்தக்க பௌத்த மதகுருவொருவர் தவறான விளக்கத்தைக் கற்பித்து  கருத்து வெளியிட்டிருந்ததையிட்டு நாங்கள் கவலையடைகிறோம்.ஜனாதிபதிக்குச் சமர்ப்பித்த எமது ஆவணத்தில் அந்த விடயத்தில்  நியாமாக நடந்து கொள்ளுமாறுதான் நாம் கேட்டிருந்தோம்.



மேலும், இந்தக் காலகட்டத்தில், அதாவது இவ்வாறான வரலாற்று ஆளுமைகளைப் பற்றி புத்தகங்களில் வடித்துவைக்கின்ற இந்த நல்ல பணியை சகோதரி ஸக்கியா ஸித்திக் செய்திருப்பது போன்று, ஆவணப்படுத்தப்படவேண்டிய விடயங்கள் ஏராளமாக உள்ளன. அதே வேளை, இந்த சமூகம் மறந்துவிடாமல் இருப்பதற்கென்று அடுத்த சந்ததியினரும் நினைவில் வைத்திருக்கவேண்டிய விதத்தில் சில விடயங்களை உயிரோட்டமாக வைத்திருக்கவேண்டிய அவசியம் எப்படி ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தை ஹொலோகாஸ்ட்  என்று யூத சமூகம் தொடர்ந்தும் நினைவில்வைத்திருப்பதற்கு எத்தனிக்கிறதோ அதேபோன்று எங்களுக்கு நடந்த அநியாயங்களும் அதே  அடுத்த சந்ததியினரும் நினைவில் வைத்திருக்கத்தக்கதாக  ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்ற விடயத்தை இங்கு அழுத்தந்திருத்தமாகக் கூறிவைக்க விரும்புகிறேன்.


(தொகுப்பு :எம்.என்.எம்.யாஸிர் அறபாத்)

No comments

Powered by Blogger.