Header Ads



அனைவரையும் விழுங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுப்பதாக சஜித் தெரிவிப்பு



அரசாங்கம் அனைத்துக்கட்சி வேலைத்திட்டத்தை முன்வைத்தாலும் உண்மையில் அரசாங்கம் அனைவரையும் விழுங்கும் வேலைத்திட்டத்தையே நடைமுறைப்படுத்துவதாகவும், எந்தப் பதவியை வழங்கினாலும் மக்கள் போராட்டத்தை நசுக்கும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


சகல பேதங்களையும் மறந்து கருத்துக்களை ஒரு கணம் ஒதுக்கி வைத்து அரச அடக்குமுறையை தோல்வியடையச் செய்வதற்கு ஒன்றிணைவோம் என அனைத்து சக்திகளுக்கும் அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரியாவிடை நிகழ்வில் ஆரம்பித்த பயங்கரவாத பாணியிலான அடக்குமுறையே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் இந்நாட்டு பிரஜைகளின் உரிமைகளை மீறுவதாகவும், மக்களின் உரிமைகளை மீறவோ, அழிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அரசாங்கம் மிகவும் கொடூரமான முறையில் அடக்குமுறையை தனது ஆயுதமாக்கிய நிலையில், “அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணி முன்னெடுப்பு” நேற்று (24) நடைபெற்றது.


 அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு இலங்கை மன்றத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பிரித்தானிய, கனேடிய, அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன், எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.