Header Ads



பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்


இந்நாட்டின் இளம் தலைமுறையினர் பாரிய புரட்சியை முன்னெடுத்ததாகவும், அதன் விளைவாகவே நாட்டை அதல பாதாளத்தில் தள்ளிய ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்ற முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எனினும், அந்த பாரிய புரட்சியையும், மக்கள் போராட்டத்தையும் முன்னெடுத்த இளம் தலைமுறையினருக்கு எதிராக அரச அடக்குமுறை ஏவப்படுவதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக அரசாங்கம் அவர்களை வேட்டையாடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதற்கமைவாக இன்று இளைஞர்களை வேட்டையாடும் யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வசந்த முதலிகே உள்ளிட்ட பலருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


தமது சொந்த அரசியல் கருத்தை முன்வைக்கும் தவறுக்காக அரசாங்கம் இளைஞர்களை இப்படி நடத்துகிறதா என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், அரச பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் மிகவும் பாரதூரமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நவீன இலங்கையை உருவாக்குவதற்காக பொதுமக்கள் கோரும் சமூக மாற்றத்திற்கான உடன்பாட்டை எட்டுவதற்காக சீர்திருத்தங்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தாபிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று (22) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், இளைஞர் சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் இதன்போது கலந்துகொண்டனர். இந்தப் பணியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கான செயலகமொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.


அநீதிக்கும், அநியாயத்துக்கும், அடக்குமுறைக்கும் எதிராக முன்நிற்கும் இளைஞர் சமூகத்துடன் ஒன்றிணைந்து, ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.