Header Ads



ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 12 ஆரம்பம் - தூதுவர்களுக்கு அலி சப்ரி விளக்கம்


 ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி விளக்கமளித்துள்ளார்.


நாட்டின் தற்போதையை பொருளாதார, அபிவிருத்தி மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள வௌிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை சந்தித்து வௌிவிவகார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.


சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.


நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது வௌிவிவகார அமைச்சர் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு எடுத்துக்கூறியுள்ளார்.


மனித உரிமைகள், நீதி மற்றும் சமத்துவம் தொடர்பிலான விடயங்களில் மேலும் முன்னேற்றமடையும் வகையில், ஒருமித்த கருத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பேரவையுடனான ஆக்கபூர்வமான செயற்பாட்டை இலங்கை தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.


ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.