Header Ads



பயங்கரமான நிகழ்வுகளைக் கூட, 2 வாரங்களுக்குள் மறந்துவிடும் மோசமான பாரம்பரியம் இலங்கையர்களிடம் உள்ளது


 நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது என்று கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,குற்றச்செயல்கள் தொடர்பான பல விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்ஸினால், வழங்கப்பட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு இன்று -13- கட்டுவாப்பிட்டியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு வாரங்களுக்குள் பயங்கரமான நிகழ்வுகளை மறந்து விடுகின்ற மோசமான பாரம்பரியம் இலங்கையர்களிடம் உள்ளது. இலங்கையில் காலங்காலமாக நடந்த கொலைகள், கொடூரமான தாக்குதல்கள், பேருந்து குண்டுகள், தொடரூந்து குண்டு தாக்குதல்கள், அரசியல் தலைவர்களின் கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர், வெள்ளை வேன் கடத்தல்கள் போன்றவற்றை மறந்துவிடும் போக்கு உள்ளது.

இலங்கையின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் எதுவும் எந்தவொரு அரசாங்கத்தினாலும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. சில சமயங்களில் விசாரணைகள் அனுமதிக்கப்படவில்லை அல்லது மறைக்கப்பட்டு தாமதப்படுத்தப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. எனவே, நாட்டின் சட்டத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் சுயாதீனமாக இருக்க வேண்டும், காவல்துறையும் சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கொழும்பு பேராயர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் அழுத்தங்களுக்கு பொலிஸார் தொடர்ந்தும் அடிபணிய முடியாது எனவும்,மேலும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தற்போதுள்ள முறைமை மாற வேண்டும். நேர்த்தியான ஆடை அணிந்தவர்களுக்கு ஒரு சட்டமும், தெருவில் வேலை செய்பவருக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நாட்டை ஆளும் தலைவர்கள், நாட்டில் வெளிப்படையான நீதி முறைமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.