Header Ads



ரணிலுக்கு ஆதரவளிக்க, அதாஉல்லா தீர்மானம்


பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் என்று பலரும் கருதுகின்ற இச் சந்தர்பத்தில் பலமுள்ள ஒரு பிரதம அமைச்சரை தேடுவதே நமது பணி என்பதால் றணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக தேசிய காங்கிரஸ் அரசியல் உயர் பீடம் தீர்மானித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஏ.எல்.எம். அதாஉல்லா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், நம் நாடு என்றும் இல்லாதவாறு எதிர் கொண்டுள்ள பொருளாதார , சமூக , அரசியல் நெருக்கடி நிலைகளில் இருந்து நாட்டை மீட்பதற்கு பாராளுமன்றத்திற்குள்ளும் , வெளியிலும் அரசியல் தலைவர்கள் , கட்சிகள் , குழுக்கள் என பல கூட்டங்கள் , சந்திப்புக்கள் நடை பெற்றிருக்கின்றன. அவ்வேளைகளில் பல கட்சிகளின் கருத்துக்களை  செவிமடுத்ததோடு , எமது நிலைப்பாடுகளை எல்லா சந்தர்ப்பங்களிலும் நிலை நிறுத்தி இருக்கின்றோம்.

 நாட்டு மக்கள் எல்லோரும் வாழ்வதற்கான ஒரு முறையான யாப்பு உருவாக்கப்பட வேண்டும்  என்ற எண்ணங்களோடு தேசிய காங்கிரஸ் கடமையாற்றுகின்றது. இந் நிலையில் ஜனாதிபதி பதவி பாராளுமன்றத்திற்கு இடையே அதிகார மாற்றங்கள் தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் றணில் விக்ரமசிங்க இதற்காக உழைத்திருக்கின்றார். மேற் சொன்ன விடயங்களை கருத்தில் கொண்டும் , பல முறை பிரதமராக இருந்த அனுபவம் இன்றைய ஜனாதிபதி வெற்றிடத்தை பூரணப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. 

இந் நிலையில் அரசியல் ஆர்ப்பாட்ட நெருக்குவாரங்களினால் ஜனாதிபதியின் பதவி விலகலும் பிரதம அமைச்சர் றணில் விக்ரமசிங்க அவர்களின் பதில் ஜனாதிபதி நியமனமும் , அடுத்து மேற் கொள்ளப்பட வேண்டிய மிகப்பாரிய பணிகளுக்கு வித்திட்டிருக்கின்றது எனலாம் . இறுக்கமாக இக்கால கட்டத்தையும் பொருளாதார நெருக்கடியையும் நாடு எதிர் கொண்டிருக்கும் இத் தருணத்தில் நாட்டின் எஞ்சிய  ஆட்சி காலத்தை தலைமை ஏற்று நடாத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு யாப்பு இடமளித்துள்ளது. அந்த வகையில் மூன்று வேட்பாளர்கள் இப்போது  பாராளுமன்றத்தில் களம் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த காலங்களில் நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் பிரதம அமைச்சர்களில் இன்று வாழ்கின்றவர்கள் எல்லோரும் ஒன்றாகயிருந்து சரிந்து போன பொருளாதாரத்தையும் , நாட்டின் கெளரவத்தையும் கட்டி எழுப்புவதற்கு ஒன்று சேர வேண்டும்  என்பது தேசிய காங்கிரஸின் நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார்.


நூருல் ஹுதா உமர்


No comments

Powered by Blogger.