Header Ads



கோட்டாபய சென்றவுடன் ஜனாதிபதி கதிரையில் அமரலாம் என, ரணில் ஒருபோதும் நினைக்கக் கூடாது


13 ஆம் திகதி வரை காத்திருந்து சுபநேரத்தை பார்த்து காலத்தை கழிக்காமல் உடனடியாக இராஜினாமா கடிதங்களை கையளிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளனர்.

காலி முகத்திடல் கோட்டா கோ கிராமத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டை விட்டு வெளியேறாது சுபநேரத்தை பார்த்துக்கொண்டு பதவி விலகாமல் இன்னும் ஒரு நாள் ஆட்சியில் இருக்க முற்பட்டால், அதற்கு இடமளிக்க முடியாது.

கோட்டாபய ராஜபக்ச சென்றவுடன் ஜனாதிபதி கதிரையில் அமரலாம் என ரணில் ஒருபோதும் நினைக்க முடியாது.ரணிலை ஜனாதிபதி கதிரையில் ஒரு நாளேனும் அமரவிடமாட்டோம்.

ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தினை கையளிக்கும் வரை மக்களின் கட்டுப்பாட்டிலிருந்து கட்டிடங்கள் விடுவிக்கப்படமாட்டாது.பதவி விலகுவதாக கூறி விளையாட முற்பட்டால் ஜனாதிபதியை ஒருநாளேனும் இருக்கவிடமாட்டோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் வெளியேறியதன் பின்னர், சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சிலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். ஆனால் மக்களின் அரசியல் கோரிக்கைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும்,நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்ப முயற்சித்தால் அதற்கு இடமளிக்க மாட்டோம்.மக்கள் போராடினார்கள், இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், அனைத்துக் கட்சிகளின் ஊழல்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடியாது.

எனவே காலத்தை கழிக்காமல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக இராஜினாமா கடிதங்களை கைளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.