Header Ads



அரசாங்கமும், ஜனாதிபதியும் உடனடியாக பதவி விலக வேண்டும் - இனியும் ஆட்சியில் இருக்க தார்மீக உரிமையில்லை


தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இனியும் ஆட்சியில் இருக்க அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கொழும்பு பேராயர்,  நாடு முழுமையான பொருளாதார வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவுகள் மக்களை இருண்ட படுகுழியில் தள்ளியுள்ளது என்றும், அதனை வார்த்தைகளால் விபரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமரின் நியமனத்துடன் சிறந்த எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் மீண்டும் கிளர்ந்தெழுந்த நிலையில், தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக பலர் மௌனம் காத்தனர். 

எனினும், மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய அவல நிலை மிகவும் மோசமாகவும் தாங்க முடியாத வேதனையாகவும் மாறியுள்ளது. 

கடந்த இரண்டரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தொலைநோக்கற்ற மற்றும் தன்னிச்சையான முடிவுகளால் ஏற்பட்ட நெருக்கடிக்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நேரடியாக பொறுப்பு கூற வேண்டும். 

ஆரம்பத்தில் இருந்தே, மக்கள் மீது சுமத்தப்பட்ட அடக்குமுறைகள், சுமைகளைக் கண்டிக்க நாங்கள் தயங்கவில்லை. அத்தியாவசியப் பொருட்களைப் பெற சொல்லொணாத் துன்பங்களைச் சந்திக்கும் மக்கள் வரிசையில் நாட்களைக் கழிக்கின்றனர். 

மேலும் இந்த சூழ்நிலையிலிருந்து அவர்களை நிச்சயமாக விடுவிக்கக்கூடிய ஒருங்கிணைந்த திட்டம் அரசிடம் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள நிலையில் ராஜபக்ஷ குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதே நாட்டை மோசமான சூழ்நிலையில் இருந்து விடுவிப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாகவும் கொழும்பு பேராயர் குறிப்பிடுகிறார். 

ராஜபக்ஷக்களின் ஆளும் கட்சி, தங்களுக்குச் சேவை செய்ய வேண்டிய கடமையை அப்பட்டமாகப் புறக்கணித்து, மக்களின் நலனை விட, தமது குடும்பத்தின் அரசியல் அதிகாரத்தையே முக்கியமாகக் கருதுகிறது என்பதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது. 

இதுவரை செய்தவை அனைத்தும் அரசியல் ஏமாற்று வித்தையாகவே இருந்தது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இலங்கை ஜனாதிபதியும், அரசாங்கமும் இந்த துயரமான நிலைமைக்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுமாறும்,  இனியும் பதவியில் தொடர்வதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை எனவும், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

இந்த சூழ்நிலையில் மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் அதிகாரத்தை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.