Header Ads



வக்பு சபையின் செயற்பாடுகள் புத்தசாசன அமைச்சரினால் இடைநிறுத்தம் - முஸ்லிம் விவகாரங்களில் அநாவசிய தலையீடு என கண்டனம்


- Siraj Mashoor -

சத்தமில்லாமல் வக்பு சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன். உறுப்பினர்கள்: ஏ.உதுமாலெப்பை, ஸக்கி அஹமட், அஷ்ஷெய்க் அர்க்கம் நூரமித், எம்.றபீக் இஸ்மாயில், எம்.சிராஜ் அப்துல் வாஹிட், மௌலவி பஸ்லுர் ரஹ்மான் வாஹிட் ஆகியோராவர்.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவே, கடிதம் மூலம் வக்பு சபைத் தலைவருக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் இவ்வாறு அறிவித்துள்ளார் என விடிவெள்ளி பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரால் இப்படி வக்பு சபை உறுப்பினர்களை ஒரேயடியாக முடக்கவோ தடாலடியாக சபையைக் கலைக்கவோ முடியாது. வக்பு சட்டத்தில் அதற்கான இடம்பாடு இல்லை என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

காரணம் கூறாமல் வக்பு சபையை இடைநிறுத்துவதை ஏற்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் ஸுஹைர் தெரிவித்துள்ளார்.

"இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வக்பு சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. எனினும் அவ்வாறு இடைநிறுத்து வதற்கான எந்தவித காரணத்தையும், அமைச்சு மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுபடுத்தவில்லை. இதனை முஸ்லிம் விவகாரங்களில் இடம்பெறும் அநாவசிய தலையீடாகவே கருத வேண்டியுள்ளது . 

"வக்பு சபையை இவ்வாறு இடைநிறுத்துவதன் மூலம், முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஊடாக நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் புத்தசாசன அமைச்சுக்குச் செல்கிறது . வேறொரு சமயத்துக்குப் பொறுப்பான அமைச்சு, இன்னுமொரு சமயத்தின் வணக்கஸ்தலங்களை நிர்வகிப்பது தொடர்பில் அதிகாரத்தைக் கொண்டிருப்பதானது யதார்த்தத்திற்குப் புறம்பானதாகும்.

"அண்மைக்காலமாக முஸ்லிம்களின் சமய, சமூக விவகாரங்களில் அநாவசிய தலையீடுகள் இடம்பெறுவதைக் காண்கிறோம். பலதார மணம் குறித்த நீதியமைச்சரின் அண்மைய கருத்து, முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள், அல் குர்ஆன் பிரதிகளை இறக்குமதி செய்வதிலுள்ள தடைகள் என பல விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்" என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் மேலும் தெரிவித்துள்ளார்.

(நன்றி: விடிவெள்ளி 07.07.2022)

இந்த நகர்வுக்குப் பின்னால் அரசியல் தலையீடு இருப்பதாகவே அறிய முடிகிறது. அதனால்தான் 'இடைநிறுத்துதல்' (Suspension) என்ற வழிமுறையை தந்திரமாகக் கடைப்பிடித்துள்ளார்கள் என்று தெரிகிறது.

ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக நிமல் சிறிபால டி சில்வா பாய்ந்தடித்துக் கொண்டு தனது அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். இது அரசியல்வாதிகளுக்கு பயம் பிடித்துள்ள காலம்.

வக்பு சபை விவகாரத்தில் தலையிடும் அரசியல்வாதிகளுக்கும் இப்படி பயத்தால்  காய்ச்சல் பிடிக்க வேண்டும். 

ஆதலால் இதைக் கண்டிப்போம். 

வக்பு சபையின் செயற்பாடுகள் சுயாதீனமாக அமைவதை உறுதிப்படுத்துவோம்.

No comments

Powered by Blogger.