Header Ads



திருடர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியை நியமித்துள்ளார்கள்: ரஞ்சித் மத்துமபண்டார


புதிய ஜனாதிபதிக்கான நேற்றைய வாக்கெடுப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தோ அல்லது எதிர்க்கட்சிகளில் இருந்தோ ஒரு உறுப்பினர்கூட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித்  மத்துமபண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -21- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று மக்களின் நிலைப்பாடு தானா வெளிப்பட்டது என கேட்க விரும்புகிறேன்? 2019 மற்றும் 2020 இல் இருந்த நிலைப்பாட்டிலிருந்து மக்கள் முற்றாக மாறிவிட்டார்கள். 2020 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது, குறித்த உறுப்பினர்களினாலேயே புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருடர்களை வெளியே விரட்ட வேண்டும் என கோரியே மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், இன்று அனைத்துத் திருடர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக ஒருவரை நியமித்துள்ளார்கள். இவர்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கவே முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதிய ஜனாதிபதி தெரிவின்போது, எமது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

ஆனால், அப்படி ஒரு உறுப்பினர்கூட அவருக்கு வாக்களிக்கவில்லை என்பதை நான் இவ்வேளையில் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். மேலும், எதிர்க்கட்சியிலுள்ள எந்தவொரு கட்சியினரும் அவருக்கு வாக்களிக்கவில்லை.

நேற்றைய வாக்கெடுப்பின் ஊடாக எமது பலம் மேலும் அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். 64 ஆக இருந்த எமது பலம் இன்று 82 ஆக உயர்வடைந்துள்ளது. 20 ஆவது திருத்தத்திற்கு ஆளும் தரப்பில் 156 வாக்குகள் வழங்கப்பட்டன. ஆனால், நேற்றைய வாக்கெடுப்பின்போது 134 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதிலிருந்து அவர்களின் வீழ்ச்சியும், எமக்கான ஆதரவும் அதிகரித்துள்ளமையை புரிந்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

எவ்வாறாயினும், வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை மீட்டெடுக்க நாம் எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் செய்யத் தயாராகவே உள்ளோம். சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது. ஆனால், அது எவ்வாறு பயணிக்கப்போகிறது என்பதையே நாம் பார்க்க வேண்டும். எந்தத் தீர்மானமாக இருந்தாலும் கட்சியின் மத்தியக்குழுக் கூடியே முடிவுகளை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.